காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டும்திட்டத்தை கர்நாடக அரசு உடனடியாக தொடங்க வலியுறுத்தி கடந்த ஜனவரி 9-ம் தேதி, காங்கிரஸ் பாத யாத்திரை தொடங்கியது. 4 நாட்களில் 139 கி.மீ. தூரத்தை கடந்த போது கரோனா 3-வது அலை வேகமாக பரவியது. இதனால் பாத யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது.
தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் மீண்டும் மேகேதாட்டு பாத யாத்திரையை ராம்நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் நடைபெற்று வரும் இந்த பாதயாத்திரையில் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர் உள்ளிட்ட மூத்ததலைவர்களும், ஆயிரக்கணக்கான காங்கிரஸாரும் பங்கேற்றனர்.
இதுகுறித்து கர்நாடக முதல்வர்பசவராஜ் பொம்மை நேற்று கூறும்போது, “கடந்த 2013-ல்காங்கிரஸ் ஆட்சியில் மேகேதாட்டு திட்டத்தை அக்கட்சி நிறைவேற்ற முயற்சிக்கவில்லை. மேகேதாட்டு திட்டத்தில் அக்கறை இருப்பதைப் போல டி.கே.சிவகுமார் நாடகமாடி வருகிறார். காங்கிரஸாரின் அரசியல் நாடகத்துக்கு வரும் 2023-ம்ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தகுந்த பதில் அளிப்பார்கள்” என்றார்.