சென்னை: மறைந்த மாண்டலின் இசைக் கலைஞர் யூ.ஸ்ரீனிவாஸ் பெயரிலான விருது, தவில் வித்வான் ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கு வழங்கப்பட்டது.
மாண்டலின் எனும் மேற்கத்திய வாத்தியத்தில் கர்னாடக இசையையும் பொழிய முடியும் என்பதை இளம் வயதிலேயே உலக இசை மேடைகளில் நிரூபித்துக்காட்டிய இசை மேதை மறைந்த மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ். அவரது பிறந்தநாளை (பிப்.28) முன்னிட்டு, மாண்டலின் ஸ்ரீனிவாஸின் தம்பி மாண்டலின் யூ.ராஜேஷ் ஆண்டுதோறும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இசைக் கலைஞர்களுக்கு மாண்டலின் யூ ஸ்ரீனிவாஸ் பெயரிலான விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான விழாவில், ‘மாண்டலின் யூ.ஸ்ரீனிவாஸ் விருதை’ தவில் வித்வான் ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேலுக்கு மூத்த இசைக் கலைஞரான கடம் வித்வான் விக்கு விநாயக்ராம் வழங்கினார். விருதுக்கான காசோலையை சவுத் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் முரளி ராமகிருஷ்ணன் வழங்கினார்.
‘தி கிரேட் மேன்’டலின் எனும் தலைப்பில் ஓர் இசை நிகழ்ச்சியை மாண்டலின் ஸ்ரீனிவாஸின் குடும்பத்துடன் இணைந்து சென்னை மியூசிக் அகாடமியில் ‘எஸ்எஸ் இன்டர்நேஷனல் லைவ்’ நடத்தியது. இதில், யூ.ராஜேஷ், ஹரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், அமன் அலி – அயன் அலி (சரோட்),இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், பியானோ கலைஞர் அனில் ஸ்ரீனிவாசன், கஞ்சிரா வித்வான் செல்வகணேஷ் ஆகியோர் தங்கள்இசையால் மாண்டலின் ஸ்ரீனிவாஸின் நினைவுகளை மீட்டெடுத்தனர்.
யூ.ராஜேஷின் மகள் காமாக்யா, மழலை மாறாத குரலில் காளிதாசரின் பாடலைப் பாடியது நெகிழ்ச்சியாக இருந்தது.