“பெட்ஷீட்டை கிழித்து சானிட்டரி நாப்கினாக பயன்படுத்துகிறோம்" -உக்ரைனில் சிக்கியுள்ள மாணவிகள் கண்ணீர்

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். மத்திய அரசு அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. உக்ரைனில் சிக்கியுள்ள பெரும்பாலான மாணவர்கள் பதுங்கு குழிகளில் தங்கியிருக்கின்றனர். கார்கிவ், கீவ் நகரங்களில் தான் பெரும்பாலான மாணவர்கள் சிக்கி இருக்கின்றனர். கீவ் நகரில் இருந்து உடனே காலி செய்யுங்கள் என்று மத்திய அரசு இந்திய மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. அதேசமயம் பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு மருந்து, தண்ணீர் போன்ற அத்தியாவசிய தேவைகளைக்கூட ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என்று இந்திய தூதரகம் மீது மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சுமி என்ற இடத்தில் உள்ள மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் அசாமை சேர்ந்த மாணவி மெஹ்ருக் நிகர் இது தொடர்பாக இந்திய மீடியா ஒன்றை தொடர்பு கொண்டு பேசுகையில், “இங்கு இருக்கும் மாணவர்களுக்கு சானிட்டரி நாப்கின், மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நான் வழக்கமாக கால்சியம் மாத்திரை எடுத்துக்கொள்வேன். ஆனால் இப்போது மாத்திரை இல்லாததால் எனது மூட்டு வலி அதிகமாக இருக்கிறது.

கார்கிவ் நகர விடுதிக்கு வெளியில் ராணுவத்தினர்

எனது ஹிமோகுளோபின் அளவும் வெகுவாக குறைந்து நாளுக்கு நாள் நான் பலவீனமடைந்து வருகிறேன். எங்களிடம் இருந்த சானிட்டரி நாப்கின் கூட காலியாகி விட்டது. வெளியில் சென்று வாங்கி வரலாம் என்றால் தெருவில் எந்நேரமும் ராணுவம் ரோந்து வந்து கொண்டிருக்கிறது. எங்களது விடுதியை சுற்றி வெடிகுண்டு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதனால் வெளியில் செல்ல முடியவில்லை. எனவே பெட்ஷீட் துணிகளை கிழித்து அதனை சானிட்டரி நாப்கின்களாக பயன்படுத்துகிறோம். இது சுகாதாரமற்றது என்று எங்களுக்கு தெரியும். ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை”என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். நிகர் கவுகாத்தியை சேர்ந்தவர் ஆவார்.

பாட்னாவை சேர்ந்த மொகமத் பைசல் என்ற மாணவரும் இங்குதான் படித்து வருகிறார். அவர் இது குறித்து கூறுகையில், “நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் விடுதியில் கஷ்டப்படுகின்றனர். வெளியில் சென்று தண்ணீர் கூட வாங்கி வர முடியாத நிலையில் இருக்கிறோம். இப்போது சோடா தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டிருக்கிறோம். சாப்பாடு இல்லாமல் குழாய் தண்ணீரை குடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எல்லையை கடக்கும் நபர்களிடம் ரஷ்ய படைகள் மிகவும் மோசமாக நடந்து கொள்வதாக கேள்விப்பட்டு மிகவும் அச்சத்தில் இருக்கிறோம். உக்ரைன் மக்கள் அனைவரையும் போரிடும் படி உக்ரைன் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ரிக்‌ஷா இழுப்பவர்கள் கூட துப்பாக்கியை தூக்கிக்கொண்டு போரிடுகின்றனர். எனக்கு கணித பாடம் நடத்தும் ஆசிரியர் கூட ஏ.கே.47 ரக துப்பாக்கியுடன் போருக்கு சென்று இருக்கிறார்” என்றார்.

உக்ரைனிலிருந்து வந்த மாணவர்கள்

பதுங்கு குழிக்குள் கழிவறை வசதிகள் கூட இல்லாமல் பல மணி நேரம் சிறுநீர் கூட கழிக்க முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்று மாணவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். இந்திய மாணவர்களை உக்ரைன் எல்லைக்கு அழைத்து செல்லும் டாக்சி டிரைவர்கள் மாணவர்களை நடுவழியில் நிறுத்திக்கொண்டு குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்தால்தான் மேற்கொண்டு செல்வேன் என்று கூறி மிரட்டுகின்றனர். சில நேரங்களில் நடுவழியில் இறக்கிவிட்டு சென்றுவிடுவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். இதனால் டாக்சியில் உக்ரைன் எல்லைக்கு செல்ல பயமாக இருப்பதாக தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.