புதுடில்லி: உக்ரைனின் கார்கிவ் நகரில், நடந்த வெடிகுண்டு வீச்சில், இந்திய மாணவர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளார்.
வீடியோ கான்பரன்சிங் முறையில் பேட்டியளித்த அவர் கூறியதாவது: கார்கிவ் நகரில், நடந்த வெடிகுண்டு வீச்சில், கர்நாடகாவை சேர்ந்த மாணவர் நவீன் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவோம். கார்கிவ் மற்றும் உக்ரைனின் கிழக்கு பகுதியில் தவிக்கும் இந்தியர்கள் தொடர்பாக, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். அங்கு சிக்கி உள்ளவர்களை ரஷ்யா வழியாக மீட்பது குறித்து இந்தியாவிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இந்தியாவுடன் பிராந்திய அளவில் உறவு வைத்துள்ளோம். ஐக்கிய நாடுகள் சபையில், தனது நிலையை சமநிலையில் வெளிப்படுத்தியதற்காக இந்தியாவிற்காக நன்றி தெரிவித்து கொள்கிறோம். பிரச்னையின் ஆழத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளது.
எஸ்-400 விநியோகத்தில் எந்த தடையும் இருக்காது என கருதுகிறேன். தடையின்றி இந்த ஆயுத விற்பனை தொடரும். தடை புதிதோ அல்லது பழையதோ, இந்த ஆயுத விற்பனையில் எந்த இடையூறும் ஏற்படுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement