கொழும்பு: கடுமையான பொருளாதார பாதிப்பை சந்தித்து வரும் இலங்கையில் நேற்று முதல் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 சதவீதமாக இருந்த நிலையில் 2020-ம் ஆண்டில் கரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதாரம் பாதாளத்துக்குச் சென்று மைனஸ் 16.3 சதவிதம் என வரலாறு காணாத கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது.
2021, நவம்பர் நிலவரப்படி இலங்கை அரசிடம் 160 கோடி அமெரிக்க டாலர்தான் அந்நியச் செலாவணி கையிருப்பாக உள்ளது. அடுத்த 12 மாதங்களுக்கு மட்டுமே கையிருப்பு இருக்கிறது. ஆனால், வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடனாக இலங்கை அரசும், தனியார் துறையும் 730 கோடி டாலர் செலுத்த வேண்டும், இதில் 500 கோடி டாலர் சர்வதேசக் கடன் பத்திரங்களாக இருக்கின்றன.
2019 ஆம் ஆண்டு 750 கோடி அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்திருந்த இலங்கை 2021 ஜூலை மாதம் 280 கோடியாகக் குறைந்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு கரைந்தது. இறக்குமதிக்காகவும் அந்நியச் செலாவணி அதிகமாக செலவிடப்பட்டது. அந்நியச் செலாவணி குறைந்ததால், இலங்கை பணத்தின் மதிப்பும் குறைந்தது, கடந்த ஆண்டில் மட்டும் 8 சதவீதம் சரிந்துள்ளது.
பணத்தின் மதிப்பு குறைந்ததால், ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.250, சர்க்கரை கிலோ ரூ.215, உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 உளுந்து கிலோ ரூ.2,000 ஆகவும் வரையிலும் விற்கப்பட்டது.
இதுமட்டுமின்றி அந்நிய செலவாணி கையிருப்பு குறைவால் கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் உள்ளது. இதனால் கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு அங்குள்ள பெட்ரோல், டீசல் நிலையங்களில், நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்திருப்பது வழக்கமாகி வருகின்றன.
இதுமட்டுமின்றி எரிபொருள் இல்லாததால், மூன்று அனல் மின் நிலையங்களின் செயல்பாடு முழுமையாக முடங்கியுள்ளது. இதனால் மின் பற்றாக்குறை அதிகரித்து மின்வெட்டு தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் இலங்கையில் நேற்று முதல் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் கடந்த 1996- ஆம் ஆண்டு கடுமையான மின் வெட்டு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் வறட்சியால் நீர் நிலைகள் வறண்டன. இதனால், மின் உற்பத்தி இன்றி கடுமையான மின்வெட்டு ஏற்பட்டது.
கடந்த 26 ஆண்டுகளில் இலங்கையில் இதுபோன்ற ஒரு மின் வெட்டு அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
சுழற்சி முறையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த மின் வெட்டினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டு காரணமாக தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியவில்லை. தொடர்ந்து மின்வெட்டு நீடித்தால் இலங்கை மேலும் கடுமையான பொருளாதார நெருக்கடிக் ஏற்படும் சூழல் உள்ளது.