புதுச்சேரி : ‘உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழு முயற்சி மேற்கொண்டுள்ளது’ என கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.
கடற்கரை சாலையில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்து, கவர்னர் தமிழிசை பேசியதாவது:இருசக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்து நேர்ந்தால், உயிரிழப்புகளை ஹெல்மெட் தடுக்கும். எனவே, இருசக்கர வாகனத்தில் செல்வோர் ஹெல்மெட் அணிய வேண்டும். அதுபோல், வைரஸ் தொற்றில் இருந்து முக கவசம் நம்மை பாதுகாக்கும்.உக்ரைனில் இருந்து அழைத்து வரப்படும் மாணவர்கள் எந்த மாநிலத்தவர் என்ற பாகுபாடு இல்லை.
நம் நாட்டின் அனைத்து மாணவர்களும் மீட்கப்பட வேண்டும்.உக்ரைன் நாட்டில் இந்திய மாணவர்கள் ஒரே இடத்தில் இல்லை. வெவ்வேறு இடங்களில் உள்ளனர். எல்லை அருகே இருந்தவர்களை மீட்பது சுலபமாக இருந்தது.
ரஷ்யாவை ஒட்டியுள்ள பகுதி, உட்பகுதியில் இருக்கும் மாணவர்களை மீட்பதில் சற்று சிரமம் உள்ளது.அனைத்து மாணவர்களையும் மீட்க, 4 மத்திய அமைச்சர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பப் படுகின்றனர். மத்திய அரசு மாணவர்கள் மீது அந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளது.
ஒரு மாணவர் கூட விடுபடாமல் அத்தனை பேரையும் அழைத்து வர வேண்டும் என்பது நம் விருப்பம். புதுச்சேரி மாணவர்கள் நிச்சயம் மீட்கப் படுவார்கள். புதுச்சேரி அரசு, வெளியுறவு துறை அமைச்சருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது.பெற்றோர்கள் துணிவுடன் இருங்கள். உங்கள் குழந்தைகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது, அரசு அனைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது, பாதுகாப்பாக இருங்கள் என கூறுங்கள்.
உக்ரைனில் குளிர் அதிகமாகவும், உணவு தட்டுப் பாடு இருப்பதாக கேள்விப்படுகிறேன். மாணவர்கள் அனைவரும் விரைவில் மீட்கப் படுவர் என்ற நம்பிக்கை உள்ளது.அதற்கான முழு முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது.புதுச்சேரியில் 85 சதவீத்திற்கும் மேல் தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது. 2வது தவணை தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளது.
மூன்றாவது அலை தீவிரம் இல்லாமல் இருந்ததற்கு தடுப்பூசி தான் காரணம். எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இலங்கை அரசு கைது செய்த காரைக்கால் மீனவர்களை மீட்க வெளியுறவு துறை அமைச்சகத்திடம் பேசி வருகிறோம். மீனவர்களை மீட்பதற்கான பணியை வெளியுறவு துறை அமைச்சக அலுவலகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement