ஜெனீவா,
உக்ரைன் மீது 7-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன.
இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் இன்று அவசர கூட்டம் நடைபெற்றது. அந்த சிறப்புக்கூட்டத்தில் உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. சபையில் இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு எதிராக 5 நாடுகள் வாக்களித்தன. இதன் மூலம் உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.