ஆப்ரேஷன் கங்கா – இந்திய விமானப் படையின் முதல் விமானம் 200 இந்தியர்களுடன் டெல்லி வருகை

ஹிண்டன்:
ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்கள் உள்பட இந்தியர்கள் தாய் நாட்டிற்கு  அழைத்து வரப்படுகின்றனர். இந்த பணியில் இந்திய விமானப்படை விமானங்களும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ருமேனியா தலைநகர் புகா ரெஸ்டில் இருந்து மாணவர்கள் உள்பட 200 இந்தியர்களை ஏற்றிக் கொண்டு இந்திய விமானப்படைக்கு சொந்தமான முதல் விமானம் டெல்லிக்கு அருகில் உள்ள ஹிண்டன் விமானப் படை தளத்தில் நேற்றிரவு தரை இறங்கியது. 
பாதுகாப்புத் துறை இணை மந்திரி அஜய் பட் மாணவர்களை வரவேற்றதுடன் அவர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக ருமேனியாவில் நிறுத்தப்பட்டிருந்த  இந்திய விமானப்படை விமானத்திற்குள் அமரவைக்கப்பட்டிருந்த மாணவர்களை விமான போக்குவரத்துத்துறை  இணை மந்திரி வி.கே.சிங் சந்தித்து பேசினார். எங்கள் இந்திய மாணவர்கள் தாய் நாட்டில் பத்திரமாக தரையிறங்க இருப்பது நல்ல விஷயம் என்றும் அப்போது அவர் குறிப்பிட்டார்.
அந்த விமானத்தில் பயணிப்பதற்காக வந்த இந்தியர் ஒருவர் தமது வளர்ப்பு நாயை அழைத்து வந்தார். அதற்கும் விமானப்படை விமானத்தில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. 
இதனிடையே, விமானப்படைக்கு சொந்தமான மேலும் மூன்று விமானங்கள் இந்திய மாணவர்களுடன் இன்று காலையில் தலைநகரில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்… உக்ரைனில் இருந்து இதுவரை 17,000 இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.