ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பின்னர், உக்ரைனில் இருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. இதனால் உயிரை பாதுகாத்துக் கொள்வதற்காக உக்ரைன் நாட்டு மக்கள் அண்டைய நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
இதேவேளை ,ஒரு வாரத்திற்குள் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 10 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. அகதிகள் நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் 40 இலட்சம் அல்லது 40 இலட்சத்துக்கு அதிகமான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி ட்விட்டரில், ‘ஏழு நாட்களில் உக்ரைனில் இருந்து 10 இலட்சம் அகதிகள் அண்டைய நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்’ என கூறியுள்ளார்.
இதற்கமைய உக்ரைன் அகதிகளில் அதிகபட்சமாக சுமார் 4.54 இலட்சம் பேர் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளனர். ஹங்கேரியில் 1.16 இலட்சத்தினரும், மால்டோவாவில் 79 ஆயிரம் பேரும், ஐரோப்பிய நாடுகளுக்கு 69 ஆயிரம் பேரும், சுலோவாகியாவில் 67 ஆயிரம் பேரும் இவ்வாறு சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.