இந்தியாவுக்கு ஏவுகணைகளை வழங்குவது பாதிக்காது: ரஷ்யா| Dinamalar

புதுடில்லி: ‘அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடையால், இந்தியாவுக்கு ‘எஸ்-௪௦௦’ எவுகணைகள் வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது’ என, ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான ரஷ்ய துாதராக நியமிக்கப்பட்டுள்ள டென்னிஸ் அலிபோவ் கூறியதாவது: உக்ரைன் மீது எடுத்துள்ள நடவடிக்கையை காரணம் காட்டி, ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்த தடையால், இந்தியாவுக்கு எஸ்-௪௦௦ ஏவுகணைகளை, ரஷ்யா வழங்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. உக்ரைன் விவகாரத்தில், இந்தியாவின் நடுநிலை பாராட்டத்தக்கது. பிரச்னைக்கான காரணத்தை இந்தியா புரிந்து கொண்டுள்ளது தான் நடுநிலை வகிக்க காரணம். இந்தியா – ரஷ்யா இடையேயான நட்புறவும், இதற்கு ஒரு காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.

அடைக்கலம் தந்த இந்தியர்

உக்ரைனின் தலைநகரான கீவில், குஜராத்தின் வதோதராவை சேர்ந்த மணிஷ் தவே என்பவர்,’சாத்தியா’ என்ற இந்திய உணவகத்தை நடத்தி வருகிறார். கட்டடத்தின் அடித்தளத்தில் இந்த உணவகம் அமைந்துள்ளது. எனவே, போர் துவங்கியது முதல், இந்தியர்கள் மட்டுமின்றி, உக்ரைனை சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர் உட்பட அடைக்கலம் தேவைப்படும் பலரும் தன் உணவகத்தில் தங்கிக் கொள்ள மணிஷ் தவே அனுமதித்துள்ளார். 130க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அவர் வழங்கி வருகிறார்.

பாக்.,குக்கு உதவிய மூவர்ண கொடி

உக்ரைனில் இருந்து அண்டை நாடான ருமேனியாவுக்கு சாலை மார்க்கமாக புறப்பட்ட இந்திய மாணவர்களிடம், இந்திய தேசிய கொடியை எடுத்து செல்லுமாறு சிலர் அறிவுறுத்தி உள்ளனர். எல்லையில் சோதனை சாவடிகளை கடக்கும்போது, மூவர்ண கொடியை கண்டதும் அவர்கள் உடனடியாக எல்லையை கடக்க அனுமதிக்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். இவர்களை போலவே, பாகிஸ்தான், துருக்கியைச் சேர்ந்த மாணவர்களும் இந்திய தேசிய கொடியை ஏந்தி சுலபமாக எல்லையை கடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.