கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பதை பொதுக்குழுவே முடிவெடுக்கவேண்டும் – கடம்பூர் ராஜூ

கோவில்பட்டி:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீடு உள்ளது. இந்த வீட்டில் உள்ளாட்சி தேர்தல் தோல்வி தொடர்பாக தேனி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும், வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் நிபந்தனையின்றி அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும் நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், “காலம் கனியும். காத்திருங்கள்” என பதிலளித்தார்.
அதன்பின், அ.தி.மு.க. தேனி மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் நிர்வாகிகள் அதே பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வுடன் இணைக்க வேண்டும் என்றும், வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோரை நிபந்தனையின்றி அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தீர்மானத்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் அ.தி.மு.க. நிர்வாகிகள் அளித்தனர். இது அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கட்சியில் யாரை சேர்ப்பது, நீக்குவது என்பது குறித்து பொதுக்குழு தான் முடிவெடுக்க வேண்டும். மாவட்ட வாரியாக தீர்மானம் நிறைவேற்றினால் கட்சிக்குள் பிளவுதான் ஏற்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.