தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தொழில்துறை பங்காண்மைக்குள் நுழைவு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பெப்ரவரி 23ம் திகதி ரத்மலானையில் உள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டன.

இரு தரப்பினருக்கும் இடையிலான எதிர்கால கட்டமைப்பு நடவடிக்கை குறித்த இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் நிஷாந்த ரணதுங்க மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோர் கைச்சாத்திட்டதாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள்/ஒப்பரேட்டர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதற்கட்ட பயிற்சி வகுப்பு தொடர்பாக இரு தரப்பினரும் அறிவித்துள்ளனர். இதற்கமைய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் – தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை ஆகியன இணைந்து மேற்கொள்ளும் உயர் கற்கைகள் இந்த ஆண்டு மே மாதம் முதல் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அரச நிறுவனங்கள் தங்களுக்கிடையே ஒருங்கிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை உபவேந்தர் இதன் போது வலியுறுத்தினார்.

தமது அழைப்பை ஏற்று ஒத்துழைத்தமைக்காக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் ரணதுங்க நன்றி தெரிவித்தார்.

இந்த நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்காக இரண்டு முக்கிய அரச நிறுவனங்களுக்கிடையேயான நீண்ட கால ஒத்துழைப்பின் ஆரம்பம் இது என கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.