சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேனி மாவட்ட
அ.தி.மு.க.
நிர்வாகிகள் கூட்டத்தில், என்னையும், சசிகலாவையும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசியிருக்கிறார்கள். இதேபோல ஒட்டுமொத்த
அ.தி.மு.க.
வும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம். ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவரத்தான் அ.ம.மு.க. முயற்சிக்கிறது. அ.தி.மு.க.வை கைப்பற்ற அல்ல. சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய இடத்தில் அ.தி.மு.க.தான் இருக்கிறது.
ஏனெனில் அந்த கட்சியில் இருந்துதான் தற்போது இதுபோன்ற குரல்கள் கேட்கிறது. எனவே ஒட்டுமொத்த
அ.தி.மு.க.
வும் ஒருமித்த கருத்துடன் ஒரு முடிவு எடுக்கட்டும். தனிப்பட்ட முறையில் நான் எந்த முடிவும் எடுக்கமுடியாது. அ.ம.மு.க. தொண்டர்கள் விருப்பத்தை தெரிந்துகொண்டுதான் எந்த முடிவையும் நாங்கள் எடுக்கமுடியும்.
தொடர் தோல்விகள் கூட இதுபோன்ற எண்ணத்தை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம். எல்லோரும் ஒற்றுமையாக, ஒன்றுபட்டு இருந்திருந்தால் சட்டமன்ற தேர்தலிலேயே தி.மு.க.வை வலுவாக எதிர்த்திருக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். அ.தி.மு.க.வில் உள்ள எல்லோருமே எனது முன்னாள் நண்பர்கள் தான். என்றைக்கும் நான் யாரையுமே எதிர்த்தது கிடையாது. என்னை தான் மூலையில் தள்ளி எதிர்த்தார்கள்.
தேர்தல்களில் வேண்டுமானால் நாங்கள் தோற்றிருக்கலாம். நிச்சயம் வலுவான இயக்கமாக உருப்பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம். அதற்கு வேறு வழிகள் இருந்தாலும், அது சரியான பாதையாக இருந்தால் தொண்டர்களின் விருப்பத்தோடு அதில் முயற்சிகளை மேற்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.