'ஒரு உடலை வைக்கும் இடத்தில் 8 மாணவர்கள் வர முடியும்': உக்ரைனில் பலியான கர்நாடக மாணவரின் உடலை மீட்பது பற்றி பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு..!!

பெங்களூரு: உக்ரைனில் இருந்து கர்நாடக மாணவர் உடலை கொண்டு வருவது பற்றிய கேள்விக்கு அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா உக்ரைனில் மருத்துவம் பயின்று வந்த நிலையில் போரில் கொல்லப்பட்டார். நவீனின் உடலை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அவரது பெற்றோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹுப்ளி பாஜக எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லாட், உயிரிழந்த மாணவரின் உடலை கொண்டுவர விமானத்தில் அதிக இடம் தேவைப்படும் என்றார். அதற்கு பதிலாக அந்த இடத்தை 8 மாணவர்களுக்கு கொடுத்து அவர்களை தாயகம் மீட்டு வரலாம் என அவர் பேசியுள்ளார். மேலும், நவீனின் உடலைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு போர் நடந்து கொண்டிருப்பதால், உயிரோடு இருப்பவர்களை அழைத்து வருவதே மிகவும் சிரமமாக இருக்கும் நிலையில், இறந்தவரின் உடலைக் கொண்டு வருவது மிகவும் கடினமானப் பணி என்றும் கூறியுள்ளார். பாஜக எம்.எல்.ஏ. அரவிந்த் பெல்லாட்டின் பேச்சிற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இறந்த மாணவனின் உடலை கொண்டுவர ஒரு கூடுதல் விமானத்தை இயக்க முடியாத நிலையில் பாஜக அரசு உள்ளதா? என்று விமர்சனம் எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.