நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில் 51 இடங்களை தி.மு.க கூட்டணி கைப்பற்றியது. அ.தி.மு.க 4 வார்டுகளில் மட்டுமே வென்றது. தி.மு.க-வுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்ததால் மேயர், துணை மேயர் பொறுப்புகளுக்கு பலரும் ஆர்வம் காட்டினார்கள். அதனால் தி.மு.க கவுன்சிலர்கள் கேரளாவில் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
மேயர், துணை மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சித் தலைமை அறிவித்ததால் இன்று நடத்த மேயர் தேர்தலில் பி.எம்.சரவணன் போட்டியின்றி தேர்வானார். அவருக்கு நெல்லை மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வஹாப் சால்வை அணிவித்து கௌரவித்தார்.
மேயர் தேர்தல் நடந்தபோது அ.தி.மு.க கவுன்சிலர்கள் நால்வரும் வரவில்லை. அதே போல, மேயர் ரேஸில் இருந்த முன்னாள் மண்டலத் தலைவரும் தி.மு.க பகுதிச் செயலாளருமான சுப்பிரமணியனும் இருந்தார். ஆனால், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை., அந்த வருத்தத்தில் இருந்த சுப்பிரமணியன் இன்று நடந்த மேயர் தேர்தலில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
துணை மேயருக்கான ரேஸில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பலரும் இருந்தனர். ஒரு சிலர், வெற்றிபெற்ற தங்களின் மனைவியை துணை மேயராக்க முயன்றனர். ஆனால் கட்சித் தலைமை அவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் தலைமை செயற்குழு உறுப்பினரான கே.ராஜூ பெயரை அறிவித்தது. அதனால் இன்று மாலையில் நடக்கும் துணை மேயர் தேர்தலில் போட்டி ஏற்படுமோ என்ற அச்சம் கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக கவுன்சிலர்கள் அனைவரும், மேயர் தேர்தல் முடிந்ததும் மீண்டும் வேனில் ஏற்றப்பட்டு ஹோட்டல் அறையில் தங்க வைக்கப்பட்டனர். நெல்லை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் டூர் புரோகிராம் இன்று மாலை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.