தேர்தலில் இந்த பிரச்சனையை எழுப்பும் ஒரே கட்சி சமாஜ்வாடி கட்சிதான்- முலாயம் சிங் யாதவ் பிரசாரம்

ஜான்பூர்:
உத்தர பிரதேசத்தில் கடைசி கட்ட தேர்தல் 7ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. ஜான்பூரில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் (வயது 82) பிரசாரம் செய்தார். 
பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாகவும், ஏழைகள் மீதான அட்டூழியங்கள் அதிகரித்திருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
“சாதியின் அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அநீதி, ஏழைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள் உள்ளிட்ட பெரிய சவால்களை நாடு இன்று எதிர்கொள்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமாஜ்வாடி கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. ஏழைகள், இளைஞர்கள், படிக்காதவர்கள் மற்றும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்காக கட்சி எப்போதும் பாடுபட்டு வருகிறது. 
விவசாயிகள் கடுமையாக உழைத்தபோதும், விளைபயிர்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை என்பது உங்கள் முன் உள்ள சவால். அவர்களுக்கு இப்போது எந்த பலனும் கிடைப்பதில்லை. விவசாயிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இதேபோல் இன்னும் பல துறைகள் இன்று புறக்கணிக்கப்படுகின்றன.
மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையை இந்த தேர்தலில் எழுப்பி வரும் ஒரே கட்சி சமாஜ்வாடி கட்சிதான். சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.