மொகாலி: மொகாலி டெஸ்ட் முதல் நாளில் இந்திய அணி 357/6 ரன் குவித்தது. பேட்டிங்கில் அசத்திய ரிஷாப் பன்ட், ஹனுமா விஹாரி அரைசதம் விளாசினர்.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று மொகாலியில் துவங்கியது. முதன் முதலாக டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பேற்ற இந்தியாவின் ரோகித் சர்மா, ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய அணிக்கு ரோகித், மயங்க் அகர்வால் ஜோடி வேகமான துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 52 ரன் எடுத்த போது, ரோகித் (29) அவுட்டானார். மயங்க் அகர்வால் 33 ரன் எடுத்தார். 100 வது டெஸ்டில் களமிறங்கிய கோஹ்லி, 45 ரன் எடுத்து, லசித் சுழலில் போல்டானார். இவர் டெஸ்ட் அரங்கில் 8000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார்.
ஹனுமா விஹாரி (58) அரைசதம் எடுத்து வெளியேறினார். ஸ்ரேயாஸ் 27 ரன் எடுக்க, ரன் மழை பொழிந்த ரிஷாப் பன்ட், 8 வது அரைசதம் எட்டினார். இவர் 96 ரன் எடுத்து அவுட்டானார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 357 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா 45, அஷ்வின் 10 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தனர்.
8000
மொகாலியில் 38 ரன் எடுத்த கோஹ்லி, டெஸ்ட் அரங்கில் 8000 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை எட்டிய 5வது இந்திய வீரர் ஆனார் கோஹ்லி (169). சச்சின் (154 இன்னிங்ஸ்), டிராவிட் (158), சேவக் (160), கவாஸ்கர் (166) முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.
Advertisement