இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதியில் நேற்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானில் சுமார் 22 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் 85 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். சுமார் 15 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். சன்னி பிரிவை சேர்ந்த தீவிரவாத குழுக்கள் ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த பின்னணியில் பாகிஸ்தானின் பெஷாவர் நகர், கோச்சா ரைசல்டார் பகுதியில் அமைந்துள்ள ஷியா பிரிவு மசூதியில் நேற்று 2 தற்கொலைப்படை தீவிரவாதிகள் நுழைய முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், இருவரையும் தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது போலீஸார் சுட்டதில் ஒரு தீவிரவாதி உயிரிழந்தார். மற்றொரு தீவிரவாதி மசூதிக்குள் நுழைந்து மனித குண்டாக வெடித்துச் சிதறினார். இதில் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தற்கொலைப்படை தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட அந்த நாட்டு தலைவர்கள், தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.