புதுடெல்லி,
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை உறுதி செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் விஷால் திவாரி, பாத்திமா தாக்கல் செய்த பொதுநல மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, “உக்ரைனில் உள்ள மனுதாரர் பாத்திமா தொடர்புகொள்ளப்பட்டுள்ளார். அவர் இன்றைக்குள் (நேற்று) விமானம் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார் என பி.கே.மிஸ்ரா தெரிவித்துள்ளார். உக்ரைனில் இருந்து இதுவரை 17 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்” என வாதிட்டார்.
மேலும் இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டை போல மத்திய அரசும் அக்கறை காட்டி வருகிறது என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தபோது, “மத்திய அரசு குறித்து நாங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்” என நீதிபதிகள் கூறினர். மேலும் இதுதொடர்பான ரிட் மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 11-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.