புதுடெல்லி: இந்தியாவில் போதுமான அளவுக்கு பசுமை எரிசக்தி வளங்கள் உள்ளன. பிற நாடுகளுக்கு ஹைட்ரஜன் எரிசக்தியை வழங்கும் கேந்திரமாக மாறும் வல்லமை இந்தியாவுக்கு உள்ளது. நாட்டில் இயற்கையாக அமைந்த சாதக அம்சங்களை பயன்படுத்தி ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியும் என்று பிரமதர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொளி கருத்தரங்கில் அவர் பேசியதாவது:
நிலையான வளர்ச்சியை சீராக எட்ட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் இலக்காகும். இத்தகைய ஸ்திரமான வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில் நிலையான எரிசக்தி வளங்கள் மிகவும் அவசியமாகும். இந்தியாவில் மரபுசாரா எரிசக்தி வளங்கள் இயற்கையாகவே அதிகம் உள்ளன. இத்தகைய சாதக அம்சங்களைப் பயன்படுத்தி உலகிற்கே ஹைட்ரஜன் சப்ளை செய்யும் நாடாக இந்தியா மாற வாய்ப்புள்ளது.
ஹைட்ரஜன் சார்ந்த பல விஷயங்கள் உள்ளன. குறிப்பாக உரம், சுத்திகரிப்பு மற்றும் போக்குவரத்துத் துறைகள் இதன் மூலம் பலன் பெறமுடியும். இதற்குரிய புத்தாக்க சிந்தனைகளை தனியார் துறையினர் முன்னெடுத்து செயல்படுத்த முன்வர வேண்டும். ஹைட்ரஜன் வளங்களை கண்டறிந்து அதை எரிசக்தியாக மாற்ற முன்வரும் திட்டப் பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை அரசு எப்போதும் செய்யத் தயாராக உள்ளது.
நாட்டின் பாரம்பரிய முறையிலான செயல்பாடுகள் மூலம் நமது எரிசக்தி தேவைகளை ஈடுகட்டிக் கொள்ள முடியும். அதுவே வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
கிளாஸ்கோ சிஓபி 26 மாநாட்டில், ஸ்திரமான வாழ்வியல் முறையை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் 2070-ம் ஆண்டிற்குள் கரியமில வாயு வெளியேற்றம் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க முடியும் என்றும் கூறினார். இந்த இலக்கை எட்டுவதற்கு 2030-ம் ஆண்டிற்குள் நமது எரிசக்தி தேவையில் 50 சதவீதம் மரபு சாரா எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இந்தியா இலக்குகளை நிர்ணயித்து அதை செயல்படுத்தும் நிலையில் அதில் உள்ள வாய்ப்புகளையும் பயன்படுத்தத் தவறவிடக்கூடாது. இதைக் கருத்தில் கொண்டே கடந்த சில ஆண்டுகளாக இலக்கு நிர்ணயித்து அதை எட்டும் நோக்கில் செயல்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்.
எரிசக்தி வளங்களைப் பயன்படுத்துவதில் பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் வீ டுகளில் பயன்படுத்தும் மின்சார சாதனங்களும் அடங்கும். எரிசக்தி உற்பத்தி ஒருபுறம் இருப்பினும் அதை சேமிப்பது என்பது மிகவும் அவசியம். அதுவும் ஸ்திரமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மின்சக்தியை சேமிக்கும் ஏசி, ஹீட்டர், கெய்சர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட வேண்டும்.
எல்இடி பல்புகளின் விலை ரூ. 300 முதல் ரூ. 400 வரை இருந்தது. இதன் உற்பத்தியை அதிகரித்ததன் மூலம் இதன் விலை குறைந்தது. உஜாலா திட்டத்தின் கீழ் 37 கோடி எல்இடி பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மிக அதிக அளவில் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் செலுத்தும் மின் கட்டணம் சேமிக்கப்பட்டு பயன்பெற்றுள்ளனர்.
எரிசக்தி உருவாக்கம் என்பது ஒருபுறம் இருந்தாலும், எரிசக்தியை சேமிப்பது என்பது அதிலும் குறிப்பாக மரபுசாரா எரிசக்தி வளங்களை சேமிப்பது மிகப் பெரும் சவால் என்று குறிப்பிட்டார்.
இதைக் கருத்தில் கொண்ட வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பேட்டரி ஸ்வாப்பிங் உள்ளிட்ட திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
எத்தனால் கலப்பு நடவடிக்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்காக சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகளை நவீனப்படுத்த வேண்டியதும் அவசியமாக உள்ளது என்று குறிப்பிட்டார். சர்க்கரை ஆலைகள் மற்றும் வடிப்பாலைகளை நவீனப்படுத்துவதன் மூலம் பயோ கேஸ் உற்பத்தி செய்ய முடியும் என்றார்.
நிலக்கிரியிலிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் திட்டம் சோதனை அடிப்படையில் நான்கு பகுதிகளில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல எத்தனால் கலப்பு நடவடிக்கைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கு ஆலைகள் நவீனமயமாக்கலும் அவசியமாகும். நாட்டின் எரிசக்தி தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை ஈடுகட்ட மரபுசாரா எரிசக்தி மூலங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். சமையலுக்கு எரிவாயு பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும். சூரிய எரிவாயுவுக்கு மிகப்பெரும் சந்தை உள்ளது. அதை ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். இந்த காணொளி கருத்தரங்கில் வெளியுறவுத்துறை, நிலக்கரி, மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, சுற்றுச் சூழல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
– பிடிஐ