சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு இனி தாராள அனுமதி- தனிமைப்படுத்தல் இல்லை

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில் அனைத்து இந்திய நகரங்களில் இருந்து செல்வோருக்கும் தாராள அனுமதி வழங்கப்படுகிறது. தனிமைப்படுத்தவும் அவசியம் இல்லை.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று பரவலும், கொரோனாவால் ஏற்படுகிற உயிரிழப்புகளும் குறைந்து வருகின்றன. இதனால் பல நாடுகளும் பயண தடைகளை நீக்கி வருகின்றன.

அந்த வகையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. இது 16-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்கள், எந்தவொரு நகரத்தில் இருந்தும் சிங்கப்பூருக்கு தாராளமாக செல்லலாம். அவர்கள் அங்கே போய் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இதற்கான அறிவிப்பை அந்த நாட்டின் போக்குவரத்து மந்திரி எஸ்.ஈஸ்வரன் நேற்று வெளியிட்டார்.

இதுபற்றி மேலும் அவர் கூறுகையில், ‘‘தனது எல்லைகளை பாதுகாப்பான முறையில் மீண்டும் திறக்கவும், உலகளாவிய வணிகம் மற்றும் விமான போக்குவரத்து மையமாக அதன் நிலையை மீட்டெடுக்கவும் சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது’’ என்று குறிப்பிட்டார்.

இதுபற்றிய முறையான அறிவிப்பை சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்கள்:-

* வி.டி.எல். என்று அழைக்கப்படுகிற தடுப்பூசி பயண பாதை சென்னை, மும்பை, டெல்லிக்கு அப்பால் இந்தியாவின் அனைத்து நகரங்களையும் உள்ளடக்கியதாக நீட்டிக்கப்படுகிறது.

* அதேபோல் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள விமானப்பயணிகள், மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் உள்ள பல நகரங்களில் இருந்து தனிமைப்படுத்தல் இல்லாமல் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

* மலேசியாவுக்கான வி.டி.எல். திட்டத்தின்கீழ் கோலாலம்பூருக்கு அப்பால் பினாங்கு சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வழியிலும் தினமும் 4 விமானங்கள் இயக்கப்படும்.

* இந்தோனேசியாவுக்கான இந்த வி.டி.எல். திட்டம், ஜகார்த்தா தாண்டி பாலி வரை நீட்டிக்கப்படுகிறது. தினசரி 2 விமானங்களுடன் இது தொடங்கும்.

* வியட்நாம் மற்றும் கிரீஸ் நாடுகளில் இருந்தும் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந்தேதி முதல் சிங்கப்பூர் 30 நாடுகளுடன் வி.டி.எல். சேவையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.