குமரி மாவட்டத்திற்கு 7-ந்தேதி மு.க. ஸ்டாலின் வருகை

நாகர்கோவில்:

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணமாக வருகிற 6-ந்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரை வருகிறார்.

பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடி வந்து சேருகிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு தூத்துக்குடியில் ஓய்வெடுக்கிறார். 7-ந்தேதி காலை தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் மதியம் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக குமரி மாவட்டம் வருகிறார். மாலை 4 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை பணிகளை ஆய்வு செய்கிறார்.

இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பேயன்குழியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ள மழை சேத சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார். மாலை 5 மணிக்கு குமார கோவில் பகுதியில் மழை சேத சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மதுரை செல்கிறார்.

மதுரையில் இருந்து விமானம் மூலமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவே சென்னை செல்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 7-ந்தேதி குமரி மாவட்டம் வருகையை அடுத்து அவரை வரவேற்க மாவட்ட நிர்வாகிகள் தயாராகி வருகிறார்கள்.

தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சி உள்பட 4 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. மேலும் பல்வேறு பேரூராட்சிளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ள நிலையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டம் வருகை தருவது தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குமரி வருகையையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தென்மண்டல ஐ.ஜி. அன்பு இன்று குமரி மாவட்டம் வருகிறார். குமரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணனுடன் ஆலோசனை மேற் கொள்கிறார்.

இதையும் படியுங்கள்… மணிப்பூரில் இறுதிகட்ட தேர்தல்- 22 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.