உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வினர் கட்சி கட்டுப்பாட்டை மீறலாமா? கி.வீரமணி வேதனை

சென்னை:
திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உள்ளாட்சித் தேர்தலில் குறிப்பாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற அமைப்புகளுக்கு கடந்த 19-ந் தேதி அன்று நடைபெற்ற தேர்தலில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு நற்சான்று வழங்குவது போல, எதிர்பாராத இமாலய வெற்றியை தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
1.3.2022 அன்று 69 வயதில் அடியெடுத்து வைத்த, ‘‘உங்களில் ஒருவன்’’ என்று கண்ணிமைக்காமல் கடமையாற்றும் நமது முதல்-அமைச்சருக்குப் பிறந்த நாள் பரிசாக முதல் நாள் வந்து பலரும் வாழ்த்தினர். அகில இந்தியத் தலைவர்கள் முதல் அனைத்துக் கட்சித் தலைவர்களும் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்பட தொலைபேசி மூலம் வாழ்த்தினர்.
உள்ளாட்சியில் 21 மாநகராட்சி 138 நகராட்சி 489 பேரூராட்சிகளில் 80 சதவீதத்துக்கு மேல் வெற்றியை அவரது ‘பிறந்த நாள் பரிசாக’ மக்கள் குறிப்பாக வாக்காளர்கள் அளித்து மகிழும் வேளையில், நேற்று உள்ளாட்சி பொறுப்புகளுக்கானத் தேர்தலில் சிற்சில ஊர்களில் தி.மு.க.வின் கட்டுப்பாடு மீறிய சிலரின் செயல்கள், பெரும் பூரிப்புடனும், உற்சாகத்துடன் பருவம் பாராமல், மானம் பாராமல் தொண்டாற்றிவரும் அவருக்கு மன உளைச்சலைத் தரும் வகையில் அமைந்துள்ளது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.
அறிவாசான் தந்தை பெரியார் தி.மு.க.வுக்கு கூறிய அறிவுரைதான் நம் நினைவுக்கு வருகிறது காலத்தை வென்றது அவரது மூதுரையான கருத்துரை.
“அண்ணா சொன்ன கடமை, ‘கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற மூன்று சொற்களில், மிகவும் முக்கியமானது கட்டுப்பாடு என்பதே! காரணம், ‘கடமை, கண்ணியம்‘ என்ற சொற்களுக்கு பல்வகையில் பொருள் கூற முடியும். ஆனால், ‘கட்டுப்பாடு’ என்பதற்கு ஒரே பொருள்தான் எந்த சூழலிலும். எனவே, தி.மு.க.வினர் ஒரு போதும் கட்டுப்பாட்டை மீறவே கூடாது. அப்படி நடந்தால், அவர்களை யாராலும் வெல்ல முடியாது.’’
“தி.மு.க. கெட்டியான பூட்டு; அதற்கு யாரும் கள்ளச்சாவி போட்டுவிடக் கூடாது” என்று முன்பு கலைஞர் பொறுப்பேற்ற நிலையில் கூறியது காலத்தை வென்ற அறிவுரைகள் ஆகும்.
முதல்-அமைச்சரின் வேதனையைக் கண்டு வேதனைப்படுகிறோம்.
“கூட்டணித் தோழமைக் கட்சிகளின் முன் நான் கூனிக் குறுகி நிற்கிறேன்” என்று தி.மு.க.வின் தலைவர் கூறியுள்ளது வார்த்தைகளால் வடித்தெடுத்து முடிக்க முடியாத வருத்தத்தின் வெளிப்பாடாக இருப்பதைக் கண்டு, தி.மு.க.வுக்கு வாளும், கேடயமாக உள்ள தாய்க்கழகம், தி.மு.க.வில் சிலரின் கட்டுப்பாடு மீறிய செயலால் வேதனைப்படுகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளுக்குமேல் போராட்டக்களமானாலும், தேர்தல் களங்களானாலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை எடுத்துக்காட்டான தோழமையுடன் அமைத்து அணைத்துச் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அணுகு முறை, அக்கட்சித் தலைவர்களே வியந்து பாராட்டிடும் நிலையை குலைக்கும் வகையில், ‘‘ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு’’போல, கட்டுப்பாடு மீறிய துரோகம் சிலரது பதவி வெறி நடத்தைகள் கரும்புள்ளியை அந்த வெளுத்த வெள்ளைத் துணியில் ஏற்படுத்தியது நியாயம்தானா? முதல்-அமைச்சருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தலாமா? தலைமையின் ஒவ்வொரு ஆணையும், ராணுவத் தளபதியின் ஆணையாகக் கருதவேண்டாமா?
சிறுபிள்ளைத்தனமாக சிற்சிலவிடங்களில் தோழமை கூட்டணிக்கு ஒதுக்கிய பொறுப்புகளுக்கு, குறுக்கு வழி போட்டியை ஏற்படுத்தி, வெற்றியை இப்படி நேர்வழியில் இல்லாமல் பறித்து, தி.மு.க.விற்கும், அதன் ஒப்பற்ற தலைமைக்கும் களங்கம் ஏற்படுத்தலாமா?
கட்டுப்பாட்டை மீறியவர்கள் திருந்தி முதல்-அமைச்சரைச் சந்தித்துக் கழுவாய்த் தேடுக.
உடனடியாக தி.மு.க. தலைவர் விடுத்துள்ள மின்னல் வேக அறிக்கைப்படியும், அறிவுரைப்படியும் உடனடியாகச் செயல்பட்டு, ‘வேலி தாண்டிய வெள்ளாடுகள்’ விரைந்து வேலிக்குள் வந்து, தங்களையும் காப்பாற்றி, தங்களை வளர்த்த கழகத்தின் பெருமையையும், கட்டுப்பாட்டையும் காத்துக் கொள்ள கணநேரம் கூட காலந்தாழ்த்தாமல் செயல்படவேண்டியது அவசரம், அவசியம் என்பது உரிமை கொண்ட தாய்க்கழகத்தின் கருத்தும், அன்பு வேண்டுகோளும் ஆகும்.
வெற்றி பெற்ற பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வருத்தம் தெரிவித்து, தி.மு.க. தலைவரை வந்து பார்த்து, “கழுவாய்த்’’ தேட, அவர் பெருந்தன்மையுடன் அளித்துள்ள அரிய வாய்ப்பை உடனடியாக பற்றிக் கொள்ளுங்கள்.
இன எதிரிகளுக்கு இடம் தரும் வகையில் எந்த செயலிலும் செய்ய மாட்டோம், தி.மு.க.வின் கட்டுப்பாட்டை இனி மீறவே மாட்டோம்; தலைமையின் ஆணையே எங்களுக்குத் தனிப்பெரும் சட்டம் என்று உணர்ந்து, ஓடோடி வந்து, உறுதி கூறி, தலைவரின் நொந்த உள்ளத்துக்கு மருந்து போடுங்கள்.
“உங்களையும் திருத்திக் கொள்ளுங்கள்’’ என்று தாய்க்கழகம் என்ற உரிமையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.