புதுடெல்லி,
உக்ரைனில் கடந்த மாதம் 24-ந்தேதி ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து, அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் ருமேனியா, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
முதலில் இந்த பணிகளில் ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற தனியார் பயணிகள் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தன. இதன் தொடர்ச்சியாக விமானப்படையும் களத்தில் குதித்தது. விமானப்படையின் சி-17 ரக விமானங்கள் நேற்று முன்தினம் முதல் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்திய மாணவர்களை அழைத்து வருகின்றன.
அந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 14 பயணிகள் விமானம், 3 விமானப்படை விமானங்கள் மூலம் 3,772 இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளதாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த நிலையில் உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு உள்ள இந்திய மாணவர்களுடன் 15 விமானங்கள் இன்று (சனிக்கிழமை) இந்தியா வந்து சேரும் என மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.