கீவ்: நேடோ மாநாடு, பலவீனமானதாகவும், குழப்பமானதாகவும் அமைந்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமைர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இச்சூழ்நிலையில், தங்கள் வான் பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என நேடோ அமைப்பிடம் உக்ரைன் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக, பெல்ஜியம் தலைநகர் புருஸ்சல்சில் நடந்த நேடோ நாடுகளில் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், கோரிக்கை ஏற்கப்படவில்லை.
அந்த அமைப்பின் பொது செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் கூறியதாவது: விமானங்களை பறக்க தடை விதித்தால், அது ரஷ்யா – ஐரோப்பா இடையிலான போராக மாறிவிடும் என்றார்.
இந்நிலையில் நேடோ நாடுகளின் முடிவுகள் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: நேடோ மாநாடு நடந்து முடிந்துள்ளது. இது குழப்பமான மாநாடு, பலவீனமான மாநாடு. ஐரோப்பாவின் சுதந்திரத்திற்காக நடக்கும் போரை முதன்மையான இலக்காக யாரும் கருதவில்லை என்பதை இந்த முடிவு காட்டுகிறது.
இந்த முடிவு மூலம், உக்ரைனின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு பச்சை விளக்கு காட்டப்பட்டுள்ளது. உக்ரைன் வான்வெளியை மூடினால், ரஷ்யாவுடன் நேரடி மோதலை தூண்டி விடும் என நேடோ நாடுகள் ஒரு கதையை உருவாக்கி உள்ளன. இவ்வாறு அவர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
Advertisement