‘இந்த வேலைய நான் பார்க்குறேன்’ என்று யாராவது சொன்னால், அது நிலையானதா தற்காலிகமானதா என்று கேட்கும் வழக்கம் சில காலம் முன்புவரை உண்டு. ‘டெம்பரரியா பெர்மனண்டா?’ என்ற அந்தக் கேள்வி வழக்கொழிந்து போவதற்கும் தனியார்மயமாக்கத்திற்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு. செய்யும் வேலையில் இருக்கும் அபாயங்களைச் சம்பந்தப்பட்ட நிர்வாகம் கணக்கில் கொள்ளவில்லையென்றால், இரண்டு விஷயங்கள்தான் நம் மனதில் தோன்றும். முதலாவது, அபாயங்களை மனதில் வைத்து அந்த வேலைக்கான கூலி மிக அதிகமாகத் தரப்படும். இரண்டாவது, அவ்வாறு அதிக சம்பளம் தரப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நிர்வாகம் பணியாளர்களைக் கொத்தடிமைகளைப் போல நடத்துகிறது என்பது.
உணவு விநியோகத் தொழில்
பெருநகரங்கள் தொடங்கி சிறு நகரங்களிலும் பரவிவரும் ‘உணவு விநியோக’ப் பணியைப் பார்த்தபோதும் இந்த காரணங்களே மனதில் தோன்றின. ஆனால், மிகச்சில நாட்களிலேயே இரண்டாவது காரணமே சரி என்று புரிந்துபோனது.
ஸ்விக்கி
,
ஜொமேட்டோ
, டன்ஸோ உட்பட பத்துக்கும் மேற்பட்ட செயலிகள் மூலமாக இந்தியா முழுவதும் உணவு விநியோகத் தொழில் நடந்து வருகிறது.
இவர்களது வேலை எல்லாம், சம்பந்தப்பட்ட உணவகங்களில் இருந்து ஆர்டர் செய்த உணவைப் பெற்று வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பதுதான். இதற்காகவே பிரபல உணவகங்கள் முன்பாக ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வண்ணங்களில் சம்பந்தப்பட்ட செயலி நிறுவனத்தின் சீருடையோடு பணியாளர்கள் காத்திருப்பதைக் காண முடியும். இவர்களில் பலர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். மிக அரிதாக, மீசை முளைக்காத முதிர்ந்த பாலகர்களையும் நடுத்தர வயதுப் பெண்களையும் இத்தொழிலில் காணலாம்.
கோப்புப்படம்
பணி செய்வது போக மற்ற நேரங்களில் இவர்களில் பெரும்பாலானோரது முகங்களில் புன்னகை தவழ்வதைக் காணலாம். அப்படியானால் புன்னகையற்று செயல்படுவதுதான் இப்பணியின் தன்மைகளில் ஒன்றா என்ற கேள்வி எழலாம். கொஞ்சம் நெருங்கிப் பார்த்தால், அப்படிப்பட்ட நிலையில்தான் அளவுக்குத்தான் அப்பணியிலிருந்து கிடைக்கும் வருமானமும் பாதுகாப்பும் இருப்பதை அறியலாம்.
செய்திகளும் புரிதல்களும்!
இரண்டு தினங்களுக்கு முன்னர், வாஷிங்டனை சேர்ந்த ஷா டேவிஸ் என்பவர் தனது முகவரியை மாற்றாமல் சிபோடில் எனும் செயலியில் உணவை ஆர்டர் செய்துவிட்டார். மேரிலேண்டில் உள்ள பழைய முகவரியில் உணவை விநியோகிப்பவர் போய் இறங்க, உடனடியாக ‘அந்த உணவை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று சொல்லிவிட்டார் டேவிஸ்.
அந்த இடத்தில் அருகிலேயே தனது சகோதரர் சமாதி இருப்பதாகச் சொன்ன அந்த பணியாளர் ’இன்று அவருக்கு பிறந்தநாள்’ என்று நெகிழ, அதனை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார் டேவிஸ். அவ்வளவுதான். அந்த பதிவு வைரலாகிவிட்டது. ’நீங்கள் ஒரு தேவதூதன்’ என்று டேவிஸுக்கு புகழ்மாலைகள் குவிந்துவிட்டன.
கடந்த மார்ச் 3ஆம் தேதியன்று அதிகாலை 1 மணியளவில் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஸ்விக்கி ‘ஃபுட் டெலிவரி பாய்ஸ்’ 4 பேர் குருஹ்ராமில் நடந்த விபத்தில் பலியாகினர். மது அருந்திவிட்டு வேகமாக காரை ஓட்டிய ஓட்டுநரால் இவ்விபத்து நிகழ்ந்ததாகத் தகவல்கள் சொல்கின்றன.
இரண்டுமே உணவு விநியோகப் பணி குறித்தவைதான். ஆனால், அவற்றின் பின்னிருக்கும் அல்லது விடுபட்டிருக்கும் தகவல்கள் அப்பணியின் தன்மை குறித்து கேள்வி எழுப்புகின்றன.
ஷா டேவிஸ் சம்பந்தப்பட்ட செய்தியில், அந்த பணியாளரின் பெயர் என்னவென்று அவர் கேட்கவுமில்லை, நமக்கு அது தெரியவுமில்லை. இந்த செய்தி வைரலான பின்னர்கூட, சம்பந்தப்பட்ட நிறுவனம் அதனை வெளியிடவில்லை. அதாகப்பட்டது, இந்த செய்தியால் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரும் நிறுவனமும் மட்டுமே பெயர் பெற முடியும். அந்த பணியாளரால் அது முடியவே முடியாது. காரணம், உணவைப் பெற்று நெகிழ்ந்ததோடு அவரது பங்கு முடிந்துவிட்டது.
அதாகப்பட்டது, உணவை தினமும் பல பேருக்குக் கொண்டு சேர்க்கும் அந்த நபர் அந்த உணவைச் சாப்பிடுவதே மிகப்பெரிய காரியம் என்று நினைத்தால் மட்டுமே, அவரது பெயர் நமக்கு முக்கியமில்லாமல் போகும். அந்த அளவுக்கே அப்பணியும் அது குறித்தான நம் மதிப்பீடுகளும் அமைந்திருக்கின்றன.
கோப்புப்படம்
உணவு விநியோகப் பணியாளர்கள் நால்வர் பலியான செய்தியில், எதிரே வந்த வாகனத்தை ஓட்டியவர் மது போதையில் இருந்தார் என்பதோடு தகவல்கள் நிறைவுற்றுவிட்டன. அந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு எத்தகைய உதவிகள் தரப்படவிருக்கின்றன, சம்பந்தப்பட்ட நிறுவனம் என்ன உதவிகளைச் செய்யவிருக்கிறது, இது போன்ற பணியாளர்கள் பணியின்போது விபத்துகளை எதிர்கொண்டால் என்னவாகும் என்ற கேள்விகளுக்குப் பதிலில்லை. பல நூறு கோடிகளை ஈட்டும் இத்தொழில் துறையில், அதன் அடிநாதமாக இருக்கும் இப்பணியாளர்களுக்கு பணிப் பாதுகாப்பு அறவே இல்லை என்பதையும், பணி நேரம் குறித்த வரையறைகள் இல்லை என்பதையுமே இச்செய்திகள் உணர்த்துகின்றன.
பணியாளர்களின் ஏக்கம்!
சில்லறை வர்த்தகங்களில் பெருநிறுவனங்கள் கால் பதிப்பது பெரிய விஷயமல்ல என்றானவுடன், அவற்றை விநியோகிப்பதற்கான வழிமுறைகள் மலிவானதாகிவிட்டன. குறைந்த விலையில் வீடு தேடி பொருட்கள் வந்துவிடும் உடனடி லாபத்தை கணக்கில் கொண்ட வாடிக்கையாளர்களும் அப்பணியை மேற்கொள்பவர்களின் கஷ்ட நஷ்டங்கள் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆனாலும், அப்படிப்பட்ட பணிகளில் சேர்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாகிக்கொண்டே வருகிறது. உணவு மட்டுமல்லாமல் மளிகைப்பொருட்கள், மருந்துகள் என்று இதேபோன்று பணி செய்பவர்களின் நடமாட்டம் அதிகமானதை வெகு சாதாரணமாக நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
பல மணிநேரம் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் உடல் உபாதைகள், பெட்ரோலுக்கான செலவு, சூழலியல் பாதிப்புகள், எளிதில் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் வாய்ப்புகள், கால வரையற்ற பணி நேரம், ஒரு விநியோகத்திற்குக் கிடைக்கும் குறைவான தொகை போன்றவற்றோடு மாதம் முழுவதும் பணியாற்றினால் மட்டுமே கணிசமாகச் சம்பாதிக்க முடியும் என்ற நெருக்கடியும் சேர்ந்துகொள்வதால் முற்றிலும் பணிப்பாதுகாப்பு இல்லாத நிலைமையே இத்தொழிலில் நிறைந்திருக்கிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மிகப்பெரிய இலக்கை அடைய வேண்டிய கட்டாயம் இல்லை என்பதால் நிறைய இளைஞர்கள் இத்தொழிலில் கால் பதிக்க விரும்புகின்றனர். வீடியோ கேம் விளையாடுவதைப் போன்ற உற்சாகத்தை செலுத்துவதன் மூலம், நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று நம்புகின்றனர். ஆனால், கொஞ்ச காலத்திற்குள் ‘அடுத்தது என்ன’’ என்ற கேள்வி துரத்தத் தொடங்க, அவர்களது முகங்களும் புன்னகைகளை உதிர்த்துவிடுகின்றன.
சுமார் ஆறாண்டுகளுக்கு முன்னர் இத்தொழிலில் கிடைத்த வருமானத்தைவிடவும் மிகக் குறைவாகவே இன்றிருப்பவர்கள் பெறுகின்றனர். பணிப்பளு அதிகம் என்பதால் அவர்கள் கையில் கணிசமாகப் பணம் சேர்கிறது என்பதே உண்மை. மற்றபடி, தற்போது உணவு விநியோகத்திற்கான தொகையை வெகுவாகக் குறைத்துவிட்டன சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் என்கிறார் இத்தொழிலை ஏற்கனவே செய்துவந்த பணியாளர் ஒருவர். அதே நேரத்தில், சம்பந்தப்பட்ட உணவகங்களிடம் இருந்து அந்த நிறுவனங்கள் பெறும் தொகையின் அளவு அதிகமாகியிருக்கிறது. நேரில் வந்து சாப்பிடுபவர்களுக்கான விருந்தோம்பலும் அவர்களுக்காக உணவு பரிமாறும் இடத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புகளும் அதிக செலவைக் கோரும் என்பதால், நிறைய உணவகங்கள் இது போன்ற ‘ஃபுட் டெலிவரி பாய்ஸ்’க்கு அதிக முக்கியத்துவம் தருவதும் நிகழ்கிறது.
கோப்புப்படம்
குறைந்தபட்ச சம்பளம், எரிபொருள் கட்டணம், பணியின்போது அசம்பாவிதம் நிகழ்ந்தால் இழப்பீடு உள்ளிட்ட மிக அடிப்படையான அம்சங்கள் தங்கள் பணியில் கிடைக்க வேண்டுமென்று விரும்புகின்றனர் இப்பணியாளர்கள். ஆனால், இன்றுவரை அவை ஏக்கங்களாகவே தொடர்கின்றன. அது மட்டுமல்லாமல், இது போன்ற தொழில்களைச் செய்வதாக காட்டிக்கொண்டு சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய வேண்டிய நிலைமையும் இன்று உருவாகியிருக்கிறது. ஆதலால், இப்பணியை ஒழுங்குமுறைக்கு உட்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
உணவு விநியோகம் மட்டுமல்லாமல், இரு சக்கர வாகனங்கள் மூலமாக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு வெளியே காத்திருக்கும் அனைத்துப் பணியாளர்களையும் காக்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழிப்பது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், அவர்களது ஏக்கங்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்!