ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ், கடந்த ஒரு வாரத்தில் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா மற்றும் மால்டோவாவில் இருந்து 29 மீட்பு விமானங்கள் நாடு திரும்பியதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 7 நாட்களில் ருமேனியா, மால்டோவா வழியாக மீட்கப்பட்ட 6 ஆயிரத்து 222 பேர் இந்தியா வந்தடைந்ததாகவும் அடுத்த 2 நாட்களில் மேலும் ஆயிரத்து 50 மாணவர்கள் நாடு திரும்புவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ருமேனியா வந்தடையும் இந்தியர்கள் 500 கிலோ மீட்டர் தூரம் பயணித்து புகாரெஸ்ட் விமான நிலையம் வர வேண்டியுள்ளதால், எல்லையில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுசீவா விமான நிலையத்தில் இருந்து அவர்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.