புதுடெல்லி: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவிலும் இந்திய மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவம் பயில்கின்றனர். ஐம்பது ஆண்டு களுக்கு முன்பிருந்தே மருத்துவம் பயில தமிழர்கள் ரஷ்யா செல்லத் தொடங்கினர். தற்போது சுமார் 30,000 இந்தியர் களில் தமிழர்கள் எண்ணிக்கையே 5,000-க்கு அதிக மாக உள்ளது.
இந்நிலையில், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினாலும் ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக வழக்கமான அன்றாட வாழ்கையில் உள்ளனர். எனினும், இவர்களது முழு எண்ணிக்கை விவரங்களை மத்திய அரசு திரட்ட தொடங்கி உள்ளது. இதற்காக ஒரு படிவத்தை நிரப்பி கூகுள் மூலம் அனுப்ப, ரஷ்யாவில் பயிலும் இந்தியர்களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. இதில், தற்போதைக்கு அச்சப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. எனினும், அவசர கால தேவை எனில் பயன்படுத்தும் வகையில் முழு விவரங்களை அனுப்பும்படி கோரியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனிடையே, ரஷ்யா மீது ஐரோப்பா உள்ளிட்ட சில நாடுகள் ஏற்படுத்தியுள்ள பல வகைதடைகளால் இந்திய மாணவர்களும் பாதிப்புக் குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி, வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோர்களால் வங்கிப் பரிவர்த்தனையில் அனுப்ப ‘ஸ்விப்ட்’ (SWIFT) எனும் முறை பயனாகிறது. அமெரிக்காவின் நிர்வாகத்தால் செயல்படும் இந்த ‘ஸ்விப்ட்’டை ரஷ்யாவின் முக்கிய 7 வங்கிகளில் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த வங்கிகள் மூலம் தம் பிள்ளைகளுக்கு பணம் அனுப்பும் இந்தியர்கள் வேறு வழிகளை கடைபிடிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் ரஷ்யாவின் ஆப்னிக்ஸ் நகரிலுள்ள அசாமிக் எனர்ஜி, தேசிய நியூக்கிளியர் பல்கலைக்கழக மருத்துவத் துறை 4-ம் ஆண்டு புதுச்சேரி மாணவர் பால கணபதி கூறியதாவது:
கரோனா காலத்திலும் இந்தியாவின் மத்திய அரசு ஒரு கூகுள் படிவத்தை நிரப்ப கேட்டிருந்தது. சமீபமாகப் பிப்ரவரியில் வந்த முதலாம் ஆண்டு மாணவர்களில் சிலர் தான் வீடு திரும்ப விரும்புகின்றனர். இவர்கள் வசதிக்கேற்பரஷ்யாவின் சில பல்கலைக் கழகங்கள் இணையவழியில்பாடம் நடத்த தயாராக உள்ளன.
ரஷ்யாவில் இருந்து இந்தியா திரும்ப வழக்கமாக விமானக் கட்டணம் ரூ.30 ஆயிரம் இருக்கும். இப்போது ரூ.1 லட்சம் வரை உயர்ந்துள்ளது. பணப் பரிவர்த்தனையில் டாலர்களாக மாற்றி அனுப்புபவர்களுக்கு ஸ்விப்ட் தடை சிக்கலாகி விட்டது. ரஷ்யாவிலுள்ள இந்திய தூத ரகத்தில் இருந்தும் முக்கிய தகவல் எதுவும் இல்லாததால், எங்களுக்கு வழக்கமான தேர்வுகளும் தொடங்கிவிட்டன. இவ்வாறு பால கணபதி கூறினார்.
இதற்கிடையில், ரஷ்யாவுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பிய தனியார் கல்வி நிறுவனங்களை ஏராளமான பெற்றோர் அணுகி விசாரிப்பது அதிகமாகி விட்டது.
இதனால், அந்நிறுவனங்கள் சார்பில், ரஷ்யாவில் இருந்து வீடு திரும்பும் மாணவர்கள் வரலாம் என்றும், அவர்களுக்கு தாங்கள் உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. இதை ஒரு பொது சுற்றறிக்கையாக தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு இந்திய மருத்துவக் கல்வி நிறுவனங்கள் ஓரிரு தினங்களாக அனுப்பி வருகின்றன.
உக்ரைன் போரின் மீட்பு பணிகளை ஒரு பாடமாக எடுத்து, மத்திய, மாநில அரசுகள் வெளி நாடுகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் பணியாற்றுபவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள் ளது. வெளிநாடுகளில் மருத்துவம் உள்ளிட்ட பாட கல்விகள் பயிலும் இந்திய மாணவர்களின் சரியானப் புள்ளிவிவரம் மத்திய, மாநில அரசுகளிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.