ஆடுஜீவிதம் படத்திற்காக ஓய்வு எடுக்கும் பிரித்விராஜ்
கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 5 படங்களில் நடித்து அவற்றை ரிலீஸும் செய்து விட்டார் நடிகர் பிரித்விராஜ். இதில் மோகன்லாலும் இவரும் இணைந்து நடித்த ப்ரோ டாடி என்கிற படத்தையும் இயக்கி அதையும் ரிலீஸ் செய்து விட்டார்.. ஆனால் இவற்றிற்கெல்லாம் முன்னதாக தொடங்கப்பட்டது தான் ஆடுஜீவிதம் என்கிற படத்தின் படப்பிடிப்பு. இது மட்டும் நீண்ட நாட்களாக மிகப்பெரிய இடைவெளி விட்டு அவ்வப்போது நடைபெற்று வருகிறது..
அந்த வகையில் கொரோனா முதல் அலை உருவான சமயத்தில் ஜோர்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தபோது தான் பிரித்விராஜ், கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அங்கேயே ஊரடங்கில் சிக்கிக் கொண்டார்.. அதன்பிறகு கேரளா திரும்பிய ஆடுஜீவிதம் படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பை மீண்டும் வெளிநாட்டில் தான் நடத்த வேண்டும் என்பதால் இந்த சூழ்நிலையில் அது சாத்தியமில்லை என தள்ளி வைத்திருந்தனர்.
இந்தநிலையில் பிரித்விராஜ் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் கூறும்போது, “இப்போது எனக்கு இருக்கும் படங்களை எல்லாம் முடித்து கொடுத்து விட்டேன்.. கொஞ்ச நாட்களுக்கு படப்பிடிப்புக்கு இடைவேளை கொடுத்து ஓய்வு எடுக்கப் போகிறேன்.. அதன்பிறகு ஆடுஜீவிதம் படப்பிடிப்பிற்காக அல்ஜீரியா செல்கிறேன். அங்கிருந்து ஜோர்டான் சென்று அங்கேயும் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மீண்டும் கேரளா வந்து அதன் பிறகு படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். இந்த பயணத்திற்கு கிளம்புவதற்கு முன்னதாக எனக்கு இந்த இடைவேளையும் ஓய்வும் நிச்சயம் தேவைதான்” என்று கூறியுள்ளார்..
பிரபல இயக்குனர் பிளஸ்சி இயக்கும் இந்த படம் ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. இதில் துபாயில் ஒட்டகம் மேய்க்கும் இளைஞனாக பிரித்விராஜ் நடிக்கிறார். இந்த படத்திற்காக உடல் எடையை கூட்டி குறைத்து என இரண்டு விதமான கெட்டப்புகளில் நடிக்கிறார் பிரித்விராஜ்..