ரஷ்ய போர் அடுத்தகட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதியை மீட்டுவர பிரித்தானியா மற்றும் அமெரிக்க சிறப்பு படைகள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிக ஆபத்து மிகுந்த குறித்த நடவடிக்கை தொடர்பில் 70 பிரித்தானிய வீரர்களும் 150 அமெரிக்க வீரர்களும் இரவு நேர இரகசிய பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
லிதுவேனியா நாட்டில் குறித்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என தகவல் கசிந்துள்ளது.
இவர்களுடன் உக்ரேனிய சிறப்பு படை வீரர்களும் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆனால், சொந்த நாட்டையும் மக்களையும் விட்டு இக்கட்டான வேளையில் தாம் நாட்டைவிட்டு வெளியேற முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மறுத்து வருவதாகவும்,
போருக்கான ஆயுதங்களும் உதவியும் போதும் என அமெரிக்காவிடம் முறையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, ஜெலென்ஸ்கி மீது குறிவைத்து தாக்குதல் நடவடிக்கைகள் ரஷ்ய துருப்புகளால் முன்னெடுக்கப்படும் அபாயம் அதிகரித்து வருவதாகவே நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஒப்புதல் அளித்த அடுத்த சில நிமிடங்களில் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்க தயார் நிலையில் இருப்பதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்க சிறப்பு படைகள் அறிவித்துள்ளன.
இந்த நிலையில், தலைநகர் கீவ்வில் இருந்து ஜெலென்ஸ்கியை பத்திரமாக இன்னொரு பகுதிக்கு மாற்றுவதே புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருக்கும் எனவும்,
தேவை எழும்பட்சத்தில் அங்கிருந்து அவரை மீட்பது எளிதாகவும் இருக்கும் என மூத்த பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர் ஒருவர் ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது.