கவுகாத்தி,
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்றில் தமிழ்நாடு-ஜார்கண்ட் (எச் பிரிவு) அணிகள் மோதும் ஆட்டம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 285 ரன்னும், ஜார்கண்ட் 226 ரன்னும் எடுத்தன.
59 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி 2-வது இன்னிங்சில் 54.2 ஓவர்களில் 152 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக முதல் இன்னிங்சில் சதம் அடித்த பாபா இந்திரஜித் 52 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஜார்கண்ட் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 4 விக்கெட்டுக்கு 102 ரன்கள் எடுத்தது. கேப்டன் சவுரப் திவாரி 41 ரன்னுடனும், குமார் குஷக்ரா 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
ஜார்கண்ட் அணியின் வெற்றிக்கு மேலும் 110 ரன்கள் தேவை என்ற நிலையில் இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.