நாட்டின் மிகப்பெரிய மாநிலங்களுள் ஒன்றான உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, அம்மாநிலத்துக்கான தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 7ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, அம்மாநிலத்தில் ஆறு கட்டங்களாக இதுவரை 349 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், 7ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி ஆகிய தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படும். மற்ற தொகுதிகளில் 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடைபெறவுள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
நாளை நடைபெறவுள்ள வாக்குப்பதிவுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. தேர்தலையொட்டி, அம்மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு பணியில் போலீசார், துணை ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள
பாஜக
தீவிரம் காட்டி வரும் நிலையில், மீண்டும் ஆட்சியை பிடிக்க
சமாஜ்வாடி
, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தாலும், அகிலேஷ் யாதவுக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதாக கூறப்படுகிறது மும்முனைப் போட்டி இருந்தாலும் கூட, உண்மையான போட்டி என்னவோ பாஜக-சமாஜ்வாடி இடையேயேதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.