மாஸ்கோ,
நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. ரஷிய படைகள் பல முனைகளில் இருந்தும் உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் அதே வேளையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரச பேச்சுவார்த்தைகளும் ஒருபுறம் நடந்து வருகிறது.
கடந்த மாதம் 28-ந்தேதி உக்ரைன் மற்றும் ரஷிய அதிகாரிகள் இடையே பெலராஸ் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பல மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி இருதரப்புக்கும் இடையில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதிலும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே 3-வது கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பும் முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவிடம் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என நிருபர்கள் கேள்வில் எழுப்பினர். அதற்கு அவர், “3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி இன்னும் முடிவாகவில்லை. அது உக்ரைனின் கையில் உள்ளது. நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். ஆனால் உக்ரைன் பேச்சுவார்த்தையை தாமதப்படுத்துவதற்கான சாக்குப்போக்குகளை தொடர்ந்து முன்வைக்கிறது” என கூறினார்.