புதுடெல்லி,
முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு பொன்னி தலைமையில் விசாரணை குழுவை நியமித்து, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகார் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை சீல் வைக்கப்பட்ட கவரில் ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை முடிக்க அனுமதி கோரி அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி உத்தரவிட்டது. வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் தி.மு.க. மற்றும் அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்குகளை முடித்துவைத்தது.
இந்தநிலையில் டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து லஞ்ச ஒழிப்புத்துறை 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்ற ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு நாளை (திங்கட்கிழமை) விசாரிக்கிறது.