மாஸ்கோ: செர்னோபில் அணு உலையில் உக்ரைன் அணுகுண்டுகளை தயாரித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ப்ளூட்டோனியத்தைக் கொண்டு அணு குண்டை உக்ரைன் தயாரித்து வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும் இதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை உத்தரவிட்டார். உக்ரைனிலிருந்து மேற்கத்திய ஆதரவு நாசிப் படைகளை வெளியேற்றுவதற்காகவும், நேட்டோவில் உக்ரைன் இணையக் கூடாது என்பதற்காகவும் தாக்குதல் நடத்துவதாகக் அவர் அறிவித்தார்.
இதனைக் கண்டித்து ரஷ்யா மீது ஜி7 நாடுகள், மேற்கத்திய நாடுகள், தாய்வான், சிங்கப்பூர், தென் கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் என பல தரப்பிலிருந்தும் பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் மூடப்பட்ட செர்னோபில் அணு உலையில் உள்ள அணுக்கழிவுகளில் இருந்து ப்ளூட்டோனியம் மூலம் குண்டுகளை உக்ரைன் தயாரித்து வருவதாகவும் ரஷ்ய ஊடகங்களான டாஸ், ரியா, இன்டர்ஃபேக்ஸ் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செர்னோபில் வரலாறு: உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து 65 மைல் தொலைவில் உள்ள பிரிப்யாட் ஆற்றின் கரைப் பகுதியில் செர்னோபில் அணு உலை இயங்கிவந்தது. 1970-களின் பிற்பகுதியில் கட்டப்பட்ட இந்த அணு உலையில் நான்கு உலைகள் இருந்தன. ஒவ்வொன்றும் தலா 1,000 மெகாவாட் மின்சக்தி உற்பத்திசெய்யும் திறன் கொண்டவை. 1986 ஏப்ரல் 25-ல், நான்காம் எண் உலையில் ஏற்பட்ட விபத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மனிதத் தவறால் நடந்த இந்த பெரும் விபத்து தான் உலக நாடுகளில் பலரும் அணு உலைக்கு எதிரான போராட்டங்களை இன்றளவும் முன்னெடுக்கக் காரணமாக இருக்கிறது. 2000-ல், செர்னோபிலின் கடைசி உலை மூடப்பட்டது.
செர்னோபில் விபத்து நடந்தது எப்படி? 1986 ஏப்ரல் 25-ல், நான்காம் எண் உலையில் ஒரு மின் – பொறியியல் சோதனையை நடத்த சில பொறியாளர்கள் திட்டமிட்டனர். அணு உலையில் உள்ள காற்றாடி, தனது அசைவற்ற சக்தியின் மூலம் அவசரகால தண்ணீர்ப் பம்புகளை இயக்குமா என்று கண்டறியும் சோதனையை நடத்திய பொறியாளர்கள் அணு உலை இயற்பியல் தொடர்பான அறிவுத் திறன் இல்லாதவர்கள். சோதனையைச் சரியாகத் திட்டமிடாத பொறியாளர்கள், பல தவறுகளைச் செய்தனர். இதனால் அணு உலையில் பெரும் வெடிப்பு ஏற்பட்டு, 50 டன்னுக்கும் அதிகமான கதிரியக்கப் பொருட்கள் காற்றில் பரவத் தொடங்கின. விபத்து நடந்த மறுநாள், பிரிப்யாட் ஆற்றின் அருகில் வசித்துவந்த 30,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். ஓரிரு நாட்களிலேயே 32 பேர் உயிரிழந்தனர். கதிரியக்கம் பரவியதைத் தொடர்ந்து புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் காரணமாக, சுமார் 5,000 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள். வளிமண்டலத்தில் பரவிய கதிரியக்கம், ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுகளைவிட பல மடங்கு அதிகமானது.
இப்போது, ரஷ்யப் போர் மூண்டதில் இருந்து செர்னோபில் அணுக் கழிவுகளால் எந்த ஆபத்தும் நிகழ்ந்துவிடக் கூடாது என்று உலகமே அச்சத்தில் உள்ளது. ஆனால், உக்ரைன் டர்டி பாம் எனப்படும் அணுக்கழிவைக் கொண்டே அணு ஆயுதத்தை தயாரிப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
முன்னதாக படையெடுப்பை அறிவிப்பதற்கு முன்னதாகவே, “உக்ரைன் சோவிய்த் நாடாக இருந்ததால் அதற்கு சொந்தமாக அணு ஆயுதம் தயாரிக்கும் நுணுக்கம் தெரியும். அதைப் பயன்படுத்தி ரஷ்யா மீது தாக்குதலுக்கு ஆயத்தமாகிறது” என்று புதின் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.