கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் 11வது நாளாக நீடித்துவருகிறது. இன்றைய முக்கிய நிகழ்வாக துறைமுக நகரான ஒடேஸாவைக் கைப்பற்றும் முனைப்புடன் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
ஏற்கெனவே கெர்சான், மரியுபோல், செர்ஹ்னிஹிவ் எனப் பல பகுதிகளையும் ரஷ்யா தனது கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது.
இந்நிலையில் இப்போது ஒடேஸாவைக் குறிவைத்துள்ளது. இந்நிலையில் உக்ரைனில் 18 வயது முதல் 60 வயதுடைய ஆடவர் அரசு உத்தரவை ஏற்று உள்நாட்டிலேயே உள்ளனர். அவர்கள் தற்போது துப்பாக்கிச் சுடுதலில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
லிவ் நகரில் இந்தப் பயிற்சியில் ஈடுபட்ட உக்ரைன் ஆடவர்களில் விற்பனைப் பிரதிநிதி, ஐடி நிபுணர், கால்பந்து வீரர் எனப் பலரும் அடக்கம்.
இது குறித்து 27 வயதான சென்கிவ், “துப்பாக்கியைக் கையாள்வது பயமாக உள்ளது. இந்த ஆயுதப் பயிற்சி எல்லாம் கடந்த நூற்றாண்டிலேயே ஒழிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போது மீண்டும் இந்த ஆயுதப் பயிற்சிக்கான அவசியம் இப்போது மீண்டும் எழுந்துள்ளது வேதனை தருகிறது” என்றார்.
இந்தத் துப்பாக்கிச் சூடு பயிற்சி லிவ் நகரின் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது என்பது தான் முரணின் உச்சம். இந்த மையத்திற்கு இப்போது வீரர்களின் இல்லம் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் உள்ளரங்கில் உக்ரைன் வீரர்களின் புகைப்படங்கள் உத்வேகம் புகட்ட தொங்கவிடப்பட்டுள்ளன. 2014ல் டான்பாஸில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை எதிர்த்துப் போரிட்டு வென்ற வீரர்களின் புகைப்படங்கள் அவை.
ஞாயிற்றுகிழமையான இன்று பயிற்சியை விறுவிறுப்பாக வழங்கிக் கொண்டிருந்த டென்னிஸ் கோஹட், “இங்குள்ளவர்கள் 10 பேராவது தேர்ச்சி பெற்று ரஷ்யப் படைகளுக்கு எதிராக துணிந்து நின்றால் அதுகூட பேருதவியே ” என்றார்.
துப்பாக்கிச் சுடும் பயிற்சியில், துப்பாக்கியை எப்படிக் கையாள வேண்டும். எதிரியை எப்படி குறிவைத்து சுட வேண்டும். எதிரி தாக்கும்போது எப்படி தப்பிக்க வேண்டும் என்பதெல்லாம் சொல்லிக் கொடுக்கப்பட்டது.
ஐடி மேலாளரான 37 வயது யாரோஸ்லாவ் டுர்டா, “நேட்டோ நோ ஃப்ளை ஜோனாக உக்ரைனை அறிவிக்காதா என்று எதிர்நோக்கி இருக்கிறேன். ஒருவேளை அது நடக்காவிட்டால் இங்கே எடுக்கும் பயிற்சியோடு, எனது மனைவியைய்யும், 8 வயது மகளையும் வீட்டில் விட்டுவிட்டு போர்க்களம் செல்வேன் ” என்றார்.
“இது எங்கள் நாடு, நாங்கள் தான் பாதுகாக்க வேண்டும் ” என்றும் அவர் கூறினார்.