மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தை சேர்ந்த சிறுமி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், அதன் காரணமாக உடல் நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பரவிய தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இன்று காலை அச்சிறுமி மரணமடைந்த சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரத்தை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காணாமல் போனதாக அவர் தாயார் மேலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதேநேரம், புகாரின் மீது வழக்கு பதிவு செய்யாமல் விசாரிக்கவும் என சிறுமி வீட்டு தரப்பினர் கேட்டுக்கொண்டதால், புகார் மனுவுக்கு ரசீது மட்டும் கொடுத்துள்ளனர்.
அதன் பின்னர் கடந்த 21-ம் தேதி வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர்.
சிறுமியும் அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற வாலிபரும் காதலித்து வந்ததாகவும், அவர்தான் சிறுமியை கடத்தி சென்றுள்ளார் என்பதையும் உறுதி செய்தனர். காவல்துறையினர் அவர்களை தேடிக் கொண்டிருந்தபோது, மார்ச் 3-ம் தேதி நாகூர் ஹனிபாவின் தாயார் சிறுமியை உடல் நலமில்லாத நிலையில் அழைத்து வந்து சிறுமியின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.
இதையடுத்து அச்சிறுமியை மேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். அடுத்ததாக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிறுமியின் உடல் நிலை மிகவும் மோசமாகிக் கொண்டிருந்ததால் உடனடியாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்க நிலையில் இருந்ததால் அவருக்கு என்ன நேர்ந்தது என்பதை காவல்துறையால் விசாரிக்க முடியவில்லை என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் சிறுமியை கடத்தியதாக் சொல்லபடும் நாகூர் ஹனிபாவை தனிப்படையினர் கைது செய்தனர். அவரை விசாரித்ததில், தான் சிறுமியை காதலித்து வந்ததாகவும், கடந்த 14-ம் தேதி நண்பர்கள் உதவியுடன் சிறுமியை மதுரையில் உள்ள நண்பர் பெருமாள் கிருஷ்ணனின் வீட்டுக்கு கூட்டிச்சென்று, பின்பு பள்ளிபாளையத்திலுள்ள தன் சித்தப்பா இப்ராஹிம் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அங்கு கணவன் மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஊரில் பிரச்னை ஏற்பட்டு, போலிஸ் தேடுகிறது என்று ஊரிலிருந்து தாயார் தெரிவித்ததாகவும் அதனால் தானும் அந்த சிறுமியும் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதில்
தான் எலி மருந்தை துப்பி விட்டதாகவும், ஆனால், அந்த சிறுமி எலி பேஸ்ட் சாப்பிட்டதால் உடல்நிலை சரியில்லாமல் போகவே அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் எலி மருந்து சாப்பிட்டதை மறைத்து சிகிச்சை மேற்கொண்டதாகவும், அதில் பலனில்லாததால் மார்ச் 2-ம் தேதி
சிறுமியை ஊருக்கு அழைத்துவந்து, தன் தாயாரிடம் ஒப்படைத்துவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார்.
தாயார் மதினா பேகம் சிறுமியை அழைத்து சென்று அவர் வீட்டில் ஒப்படைத்துள்ளார். அதைத்தொடர்ந்து சிறுமியின் உடல்நிலை மோசமாக இருந்ததால் மேலூர் மருத்துவமனையிலும் அதைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையிலும் சேர்த்த நிலையில்தான் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பலவிதமாக தகவல் பரவியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
மருத்துவ அறிக்கையில் சிறுமி, கூட்டு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படவில்லை, உடலில் காயங்கள் இல்லை என்று சொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
நாகூர் ஹனிபாவுக்கு உதவியாக இருந்த மதுரையை சேர்ந்த பிரகாஷ், பெருமாள் கிருஷ்ணன், தாய் மதினா, தந்தை சாகுல் ஹமீது உள்ளிட்ட உறவினர்கள் என 8 பேரை போக்சோ, கொலை முயற்சி, கடத்தல் சட்டப்பிரிவின் கீழ் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சிறுமியின் மரணத்துக்கு நீதி கேட்டு சிறுமியின் ஊர்காரர்கள் மேலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.