தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியேற்பின்போது நடந்த ஒரு நிகழ்ச்சி திமுகவினர் இடையே நெகிழ்ச்சியாக பேசப்படுகிறது. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் முரட்டு பக்தர் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வழங்கிய 111 சவரன் சங்கிலியை அவருடைய மகனுக்கே அணிவித்து நெகிழ்ந்திருக்கிறார் திமுக எம்.பி கனிமொழி.
தூத்துக்குடி 2008ம் ஆண்டு மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சியின் மேயர் பதவி இந்த முறை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. 60 வார்டுகளைக் கொண்ட தூத்துக்குடி மாநகராட்சி மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி, வ.உ.சி துறைமுகம் என முக்கிய மாநகராட்சியாக உள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சியின் மேயராக ஜெகன் பொறுப்பேற்றுக்கொண்டார். ஜெகன் மேயராக பதவியேற்றபோது, திமுக எம்.பி. கனிமொழி மாநகராட்சி மேயருக்கான செங்கோல் அளித்து மேயருக்கு அணிவிக்கப்படும் 111 சவரன் தங்கச் சங்கிலியை அணிவித்தபோது ஜெயகன் கண்களில் நீர் ததும்ப நெகிழ்ந்துபோனார்.
இதற்கு காரணம், தூத்துக்குடி மாநகராட்சி மேயராகியுள்ள ஜெகன், மகளிர் நலன் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவனின் தம்பி ஆவார். அதுமட்டுமல்ல, தூத்துக்குடியில் திமுகவை வளர்த்த மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ பெரியசாமியின் இளைய மகன்.
தூத்துக்குடி மாநகராட்சியாக மாற்றப்பட்டபோது, மேயர் அணிவதற்காக 111 சவரன் தங்கச் சங்கிலியை பெரியசாமி தனது சொந்த செலவில் செய்து மாநகராட்சிக்கு கொடுத்தார். அதிலிருந்து மேயராகப் பதவியேற்பவர், அந்த தங்கச் சங்கிலியைத்தான் அணிய வேண்டும். பெரியசாமி தூத்துக்குடி திமுகவை தூக்கி நிறுத்தியவர். கலைஞர் கருணாநிதியின் முரட்டு பக்தர். அவர் அன்று தூத்துக்குடி மாநகராட்சி மேயர் அணிவதற்கு அளித்த 111 சவரன் தங்கச் சங்கிலியை இன்று அவருடைய மகன் ஜெகன் மேயராக பதவியேற்றபோது அணிவித்த கலைஞரின் மகள் கனிமொழி நெகிழ்ச்சியடைந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“