15 ஆண்டுகளுக்கு பின் தீவிரவாதிகள் வெறி ஜம்முவில் டிரோன் மூலம் திரவ வெடிபொருள் வீச்சு: அதிகாரிகள் விசாரணை

ஸ்ரீநகர்: ஜம்முவில் 15 ஆண்டுகளுக்கு பிறகு டிரோன் மூலம் திரவ வெடிபொருள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை அளித்துள்ளது. பாகிஸ்தான் எல்லை வழியாக காஷ்மீருக்குள் டிரோன்கள் மூலம், தீவிரவாதிகளுக்கு வெடிபொருட்கள், ஆயுதங்கள், போதை பொருட்கள் வீசப்படுகின்றன. அதோடு, வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தவும் முயற்சிக்கப்படுகிறது. இவற்றை இந்திய படைகள் முறியடித்து வருகின்றன. இந்நிலையில், ஜம்முவில் உள்ள சர்வதேச எல்லை வழியாக கடந்த மாதம் 24ம் தேதி பாகிஸ்தானில் இருந்து நுழைந்த டிரோன்கள் மூலம் மூன்று பாட்டில்கள் வெள்ளை திரவம் வீசப்பட்டது. அதில் இருந்தவை திரவ வெடிப்பொருட்கள். இது, தீவிரவாதிகளுக்காக வீசப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 2007ம் ஆண்டில் தெற்கு காஷ்மீரில் தீவிரவாத அமைப்புகளால் திரவ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் திரவ வெடிப்பொருட்கள் வீசப்பட்டுள்ளன. இதுபோன்ற வெடிபொருட்களை வழக்கமான டிடெக்டர்கள் அல்லது மோப்ப நாய்கள் மூலம் கண்டறிய முடியாது என்பதால் இது ஒரு பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது’ என்றனர். * கையெறி குண்டு வீச்சு ஒருவர் பரிதாப பலிஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஹரிசிங் தெருவில் மார்க்கெட் உள்ளது. நேற்று மாலை கூட்டம் மிகுந்த அந்த பகுதியில் போலீசாரும், பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களை நோக்கி தீவிரவாதிகள் சிலர் கையெறி வெடிகுண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். அந்த குண்டு வெடித்ததில், ஒரு போலீஸ்காரர் உட்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர்களில் ஒருவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். ஒரு பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும்  பொறுப்பு  ஏற்கவில்லை.  கையெறி குண்டு வீச்சுக்கு  முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.