அமெரிக்காவின் ஜாவ்லின் ரக ஏவுகணைகள் மூலம் ரஷ்ய பீரங்கிகளை உக்ரைன் ராணுவத்தினர் தகர்த்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் வல்லரசு நாடான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலை சிறிய நாடான உக்ரைன் திறமையாக சமாளித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவிடமிருந்து வாங்கிய ஜாவ்லின் ரக ஏவுகணைகள் மூலம் ரஷ்ய பீரங்கிகளை உக்ரைன் ராணுவத்தினர் தகர்த்து வருகின்றனர்.
இதுவரை ரஷ்யாவின் 280 பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை ஜாவ்லின் ஏவுகணைகள் தகர்த்துள்ளன என்று போர்ச் செய்திகளை தொகுத்து எழுதி வரும் அமெரிக்க பத்திரிகையாளர் ஜாக் மர்பி தெரிவித்துள்ளார். இத்தகவலை அமெரிக்காவின் சிறப்பு செயல்பாட்டு அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளதாக ஜாக் மர்பி செய்தி வெளியிட்டுள்ளார்.
இதுவரை 300 ஏவுகணைகளை செலுத்தியதில் 280 பீரங்கி, கவச வாகனங்கள் தகர்க்கப்பட்டுள்ளன. அதாவது 93 சதவீத அளவுக்கு துல்லியமான தாக்குதல்களை ஜாவ்லின் ஏவுகணைகள் செய்துள்ளன.
அமெரிக்காவின் ராய்தியான் மிசைல்ஸ் அன்ட் டிஃபன்ஸ், லாக்ஹீட் மார்ட்டின் ஆகிய 2 நிறுவனங்கள் இந்த வகை ஏவுகணைகளைத் தயாரித்து அளிக்கின்றன.
பெரும்பாலான பீரங்கிகள், கவச வாகனங்களின் பக்கவாட்டுப் பகுதிகள் மிகுந்த பாதுகாப்புடனும், அதிக தடிமனுடனும் செய்யப்பட்டிருக்கும். ஆனால்அதன் மேற்பகுதியானது குறைந்தஅளவிலான தடிமனைக் கொண்டிருக்கும். இந்த வகை ஏவுகணைகள் கவச வாகனத்தின் மேற்பகுதியைத் தாக்கவல்லவை. அதனால்தான் இவரை 93 சதவீத அளவுக்கு இலக்கைத் துல்லியமாகத் தாக்குகின்றன என்று ஜாக் மர்பி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜாக் மர்பி தனது செய்திக் கட்டுரையில் கூறும்போது, “அமெரிக்காவிலிருந்து 2018-ம் ஆண்டில் இந்த வகை ஏவுகணைகள் தயாரித்து உக்ரைனுக்கு வழங்கப்பட்டன. இந்த வகை ஏவுகணைகளை ராணுவ வீரர்ஒருவர் தனியாளாக தனது தோள்பட்டையில் வைத்து இயக்க முடியும்.
இந்த வகை ஏவுகணைகளின் தாக்குதலைப் பார்த்த ரஷ்ய ராணுவம் தனது டி-72 ரக பீரங்கியை போர்க்களத்திலிருந்து திரும்பப் பெற்றுள்ளது” என்றார்.