உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, இந்த மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது. இதையடுத்து, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. உத்தரகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பிப்ரவரி 27 ஆம் தேதி முதற்கட்ட தேர்தலும், மார்ச் 3 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்துள்ளது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான மொத்தம் 403 தொகுதிகளை கொண்டு உத்தரப்பிரதேசத்தில் மட்டும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஏழாவது மற்றும்
இறுதிகட்ட வாக்குப்பதிவு
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. 9 மாவட்டங்களில் உள்ள 54 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி ஆகிய தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படும். மற்ற தொகுதிகளில் 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு பெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இன்று மாலை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாக உள்ளன என்பது குறிப்ப்பிடத்தக்கது.