மருத்துவ கல்லூரியில் மாணவர்களுக்கு மொட்டை அடித்து, கைகளை பின்னால் கட்டி நடக்க வைத்து ‘ராக்கிங்’?

நைனிடால், 
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதில், 27 முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்கள், மொட்டை அடிக்கப்பட்டு, கைகள் பின்னால் கட்டப்பட்டு தலை குனிந்து நடக்கிறார்கள். அவர்கள் வெண்ணிற லேப் கோட்டுடன், முக கவசம் அணிந்திருக்கிறார்கள்.

அவர்கள் அனைவரும் சீனியர் மாணவர்களால் ‘ராக்கிங்’ செய்யப்பட்டு இவ்வாறு நடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த வீடியோ காட்சியை பார்த்த பலரும் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தார்கள். ஹல்டுவானி மருத்துவ கல்லூரி சீனியர் மாணவர்கள் மீது நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பொங்கினார்கள்.
ஆனால் அந்த மருத்துவ கல்லூரியின் முதல்வர் அருண் ஜோஷி, அடக்கிவாசிக்க முயல்கிறார்.
‘ராக்கிங்’ நடைபெற்றதாக எனக்கு எந்த புகாரும் வரவில்லை. மாணவர்கள் இதுபோல மொட்டையடித்துக்கொள்வது வழக்கம்தான். அதையெல்லாம் ‘ராக்கிங்’ என்று சொல்ல முடியாது. பலரும் மிலிட்டரி பாணியில் ஒட்ட முடிவெட்டிக்கொண்டுதான் கல்லூரியில் சேர்கிறார்கள். எனவே இது ஒரு வித்தியாசமான விஷயமில்லை’ என்கிறார்.
அந்த மருத்துவ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர்களை தொடர்புகொண்டு ‘ராக்கிங்’ விஷயத்தை உறுதி செய்ய பத்திரிகை நிருபர்கள் முயன்றனர். ஆனால் யாரும் வாய் திறக்கவில்லை.
உண்மையில் இந்த ஹல்டுவானி மருத்துவ கல்லூரி ‘ராக்கிங்’குக்கு பெயர் ‘போனது’தான். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ‘ராக்கிங்’ தொடர்பாக பல சீனியர் மாணவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 2016-ம் ஆண்டில், சீனியர்கள் சிலர் தன்னை அடித்து உதைத்து, ஆடையைக் கிழித்துவிட்டதாக ஒரு முதலாம் ஆண்டு மாணவர் யு.ஜி.சி.யில் புகார் செய்தார். கல்லூரியிலேயே ஒரு ‘ராக்கிங்’ எதிர்ப்பு பிரிவு செயல்பட்டு வந்த போதிலும், அதில் அம்மாணவர் முறையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.