மாஸ்கோ: உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து, ரஷ்யாவில் தமது சேவையை நிறுத்திக்கொள்வதாக நெட்ஃபிளிக்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 12 நாட்களாக மேலாக உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். எனினும், உக்ரைனும் தன்னால் இயன்ற பதிலடியைக் கொடுத்து வருகிறது. இதனிடையே, ரஷ்யா மீது உலக நாடுகள் பலவும் வெவ்வேறு தடைகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில் நெட்ஃபிளிக்ஸ், டிக் டாக் (நேரடி சேவை) ஆகிய நிறுவனங்களும் தங்களது ரஷ்ய சேவையை நிறுத்தியுள்ளன. இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில், ’உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் அந்நாட்டிற்கான நெட்ஃபிளக்ஸ் சேவை நிறுத்தப்படுகிறது.
அதேபோல், போலிச் செய்திகளுக்கான ரஷ்யாவின் புதிய கட்டுப்பாடுகளை ஏற்காததால் ரஷ்யாவில் நேரடி ஒளிபரப்புச் சேவையை நிறுத்துவதாகவும், அதேநேரத்தில் தகவல் பரிமாற்ற சேவை தொடரும் என்றும் டிக் டாக் செயலி நிறுவனமும் அறிவித்துள்ளது. விசா, மாஸ்டர் கார்டு நிறுவனங்களும் தங்களது ரஷ்ய சேவையை ஏற்கெனவே நிறுத்தியுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.