12-வது நாளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில் 11 வயது சிறுவன் ஒருவன் தனது தாய் கூறியதால், உறவினர் ஒருவரை கவனித்துக்கொள்வதற்காக 1,000 கிலோமீட்டர் ரயில் தன்னந்தனியாக, போர்ச் சூழலில் பயணம் செய்துள்ளான்.
இந்த நிகழ்வு பலருக்கும் அதிர்ச்சியுடன்கூடிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குறித்த அந்த சிறுவன் ரயில் மூலம் ஸ்லோவாக்கியாவுக்குப் தன்னந்தனியாக பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோவாக்கியாவைச் சென்றடைந்த அந்தச் சிறுவனை அங்குள்ள தன்னார்வலர்கள் உணவு வழங்கி கவனித்ததாகவும், பின்னர் ஸ்லோவாக்கியா உள்துறை அமைச்சகம் அவரின் உறவினரைத் தொடர்புகொண்டதாகவும் கூறப்படுகின்றது..
இது தொடர்பாக ஸ்லோவாக்கிய உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுவதாவது, இந்த 11 வயது சிறுவனின் தாய், தன்னுடைய நோய்வாய்ப்பட்ட உறவினரைக் கவனித்துக்கொள்ளச் செல்லுமாறு, இந்த சிறுவனிடத்தில் ஒரு சிறிய பிளாஸ்டிக் பை, பாஸ்போர்ட், கையில் ஒரு போன் நம்பர் மற்றும் துண்டுக் காகிதத்துடன் ஸ்லோவாக்கியாவுக்கு ரயிலில் தனியாக அனுப்பிவைத்திருக்கிறார்” என்றனர்.
இந்நிலையில், ஸ்லோவாக்கியா உள்துறை அமைச்சகம் இந்தச் சிறுவனைப் பாராட்டி, “நேற்றைய இரவின் மிகப்பெரிய ஹீரோ. ஓர் அசாதாரண பயணத்துக்குப் பிறகு அச்சமின்மை, புன்னகை, உறுதி, ஹீரோவுக்கான தகுதி ஆகியவை மூலம் அனைத்தையும் வென்றிருக்கிறான்” என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
இதனை பலரும் பார்த்து அச்சிறுவனை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.