உத்தரப் பிரதேசத்தில் இறுதிக்கட்ட தேர்தல் நிறைவு- மாலை 5 மணி வரை 54.18 சதவீத வாக்குகள் பதிவு

லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இன்று 7-வது மற்றும் இறுதிக்கட்டமாக 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தொகுதிகளில் மொத்தம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. நக்சல்கள் ஆதிக்கம் நிறைந்த சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி ஆகிய தொகுதிகளில் மட்டும் 4 மணிக்கே வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
காலை 11 மணி நிலவரப்படி 21.55 சதவீத வாக்குகள் பதிவாகின. அதன்பின்னர் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. மதியம் ஒரு மணி நிலவரப்படி 35.51 சதவீதமும், பிற்பகல் 3 மணி நிலவரப்படி 46.40 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாலை 5 மணி நிலவரப்படி 54.18 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.