புதுடெல்லி,
மக்கள் மருந்தக தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். மக்கள் மருந்தகங்களால் பலன் அடைந்தவர்களுடன் உரையாடினார்.
அப்போது, ‘‘ஏழை மக்களின் மருந்து செலவை குறைக்க இந்த மருந்தகங்கள் தொடங்கப்பட்டுள்ளன’’ என்று அவர் கூறினார்.
பின்னர், பிரதமர் மோடி பேசியதாவது:-
எதிர்கால சவால்களை மனதில் கொண்டு, நாட்டின் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த எங்கள் அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. அதற்காக நாடு முழுவதும் மாவட்டத்துக்கு ஒரு மருத்துவ கல்லூரி வீதம் தொடங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
சுதந்திரம் பெற்றவுடன் ஒரே ஒரு எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இருந்தது. தற்போது, 22 எய்ம்ஸ்கள் இருக்கின்றன. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிக்கு நிகரான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுவரை 8 ஆயிரத்து 500-க்கு மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை மற்றொரு அரசு கடையாக மட்டுமின்றி, சாமானியர்களுக்கு தீர்வு அளிக்கும் மையங்களாகவும் திகழ்கின்றன.
நடப்பு நிதி ஆண்டில் இந்த மருந்தகங்கள் மூலம் ரூ.800 கோடிக்கு மேற்பட்ட மருந்துகள் விற்கப்பட்டுள்ளன. குறைந்த விலையில் பெற்றதால், ஏழை, நடுத்தர, கீழ் நடுத்தர மக்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மிச்சமாகி உள்ளது.
அங்கு சானிட்டரி நாப்கின்கள் 1 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. 21 கோடிக்கு மேற்பட்ட நாப்கின்கள் விற்கப்பட்டுள்ளன. இந்த கடைகள், பெண்களின் வாழ்க்கையை எப்படி எளிதாக்கி இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
‘ஆயுஷ்மான் பாரத்’ திட்ட வரம்புக்குள் 50 கோடிக்கு மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 3 கோடிக்கு மேற்பட்டோர் பலன் அடைந்துள்ளனர். இதனால் அவர்களுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மிச்சமாகி உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.