உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் – பேனா பிடித்த கைகளில் துப்பாக்கி ஏந்திய பின்னணி!

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்த போரினால் சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் தங்கள் சொந்த மண்ணை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த சாய் நிகேஷ் எனும் இளைஞர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான போர் புரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி இந்தியா- ரஷ்யா உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா ..!!!

21 வயதாகும் சாய் நிகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள கார்கோ நேஷனல் எரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகிறார். நான்காம் ஆண்டு மாணவரான இவர் உக்ரைனின் துணை ராணுவப்படையான ஜார்ஜியன் நேஷனல் லிஜியனில் இணைந்துள்ளார். சிறுவயது முதலே இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற அதிக ஆர்வத்துடன் இருந்த சாய் நிகேஷ் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால் உயரம் குறைவாக இருந்த காரணத்தால் அவர் இந்திய ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் – ரஷ்யா இடையே போர் தொடங்கியதால் தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றும் வகையில் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளார். 

இந்த தகவலை கோவை மாவட்டம் துடியலூரில் உள்ள தனது பெற்றோரிடம் சாய் நிகேஷ் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்துள்ளார். இதனை அறிந்த இந்திய உளவுத்துறை துடியலூரில் உள்ள சாய் நிகேஷின் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். ராஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்க உக்ரைன் மக்களுக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்த அந்நாட்டு அரசு வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இதனை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன், ஸ்வீடன், லித்துவேனியா, மெக்சிகோ மற்றும் இந்தியாவை சேர்ந்த தன்னார்வலர்கள் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளதாக தி கிவ் இண்டிபெண்டன்ட் எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

 

மேலும் படிக்க | Ukraine – Russia war: ஆயுதமேந்திய உக்ரைன் அழகு ராணியின் கோரிக்கை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.