இலங்கை வணிகக் குழுவிற்கும் மொஸ்கோ வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனத்திற்கும் இடையே ரஷ்ய வர்த்தக சமூகத்துடனான சந்திப்பொன்றை மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2022 பிப்ரவரி 09ஆந் திகதி ஒரு ஏற்பாடு செய்தது.
மொஸ்கோ வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தலைவர் விளாடிமிர் பிளாட்டோனோவ் தொடக்க உரையை நிகழ்த்தினார். பங்கேற்பாளர்களை வரவேற்ற அவர், தொழில்முனைவோர்களிடையே நேரடி உரையாடலை உருவாக்குவதற்கான வாய்ப்பை உருவாக்க நேரில் சந்திப்பது முக்கியமானதாகும் எனக் குறிப்பிட்டார். இலங்கையில் இருந்து வந்த தூதுக்குழுவினரின் விஜயத்திற்கு நன்றி தெரிவித்த அவர், அவர்களது கூட்டு வர்த்தக முயற்சிகள் வெற்றிபெறுவதற்காக வாழ்த்தினார். இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தமைக்காக ரஷ்யக் கூட்டமைப்பிற்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகேவிற்கு விளாடிமிர் பிளாட்டோனோவ் நன்றிகளைத் தெரிவித்தார்.
எம்.சி.சி.ஐ. மற்றும் இலங்கை வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகளின் ஆர்வத்திற்கும் மற்றும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்தமைக்கும் தூதுவர் பேராசிரியர் ஜனிதா அபேவிக்ரம லியனகே தனது நன்றிகளைத் தெரிவித்தார். இலங்கைக்கும் ரஷ்யக் கூட்டமைப்பிற்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 65வது ஆண்டு நிறைவை இந்த ஆண்டு இடம்பெறுவதை நினைவுகூர்ந்த அவர், ‘இன்றைய நிகழ்வு ஆண்டு நிறைவுக்கானதொரு முக்கிய மைல்கல்லாக இருக்கும்’ என நம்பிக்கை தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் எப்போதுமே மிகவும் நட்புடன் இருந்ததாகவும், எமது வரலாற்றில் கடினமான தருணங்களில் ரஷ்யா எப்போதும் எமது நாட்டிற்கு உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். எம்.சி.சி.ஐ.யின் உதவியுடன், எமது நாடுகளின் தொழில்முனைவோருடன் உறவுகளை ஏற்படுத்தவும், வலுப்படுத்தவும் முடியும் என நம்புகின்றேன்’ எனக் குறிப்பிட்டார். சுவையூட்டிப் பொருட்கள், மூலிகைப் பொருட்கள், ஆரோக்கிய நடவடிக்கைகள், சுற்றுலா, இரத்தினச் சுரங்கம் ஆகியவை ஒத்துழைப்பிற்காக ஆராயப்படக்கூடிய முக்கிய பகுதிகளாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொஸ்கோ வணிக சபை மற்றும் தொழில்துறையில் உள்ள கில்ட் ஒஃப் டிரேட் என்ட் சேர்வீசஸ் என்டர்பிரைசஸின் நிறைவேற்றுப் பணிப்பாளர் விளாடிமிர் ஷிஷ்கின், பல்வேறு வணிகப் பகுதிகளில் ஈடுபட்டுள்ள 50 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஒன்றிணைத்ததாகக் குறிப்பிட்டார்.
மொஸ்கோ வணிக சபை மற்றும் தொழில்துறையில் உள்ள நகை ஏற்றுமதியாளர்களின் சங்கத்தின் தலைவர் அலெக்ஸி ஷெர்பினா, இந்த பொதுக் கட்டமைப்பின் உறுப்பினர்கள் நகைத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் என்றும், உயர்தர வைரங்கள் மற்றும் வண்ணக் கற்களை தமது பணிகளில் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டார். உலகின் சிறந்த கற்களின் (குறைந்தபட்சம் சபையர்) ஆதாரமாக இலங்கை கணிசமான ஆர்வத்தைக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொஸ்கோ வணிக சபை மற்றும் தொழில்துறை சார்பில் விளாடிமிர் பிளாட்டோனோவ், மொஸ்கோ வணிக சபை மற்றும் தொழில்துறையில் உள்ள கில்ட் ஒஃப் டிரேட் என்ட் சேர்வீசஸ் என்டர்பிரைசஸ் நிறுவனத்திலிருந்து நினைவுப் பரிசுகளை தூதுவருக்கு வழங்கினார்.
இலங்கைத் தூதரகம்
மொஸ்கோ
2022 மார்ச் 07