உக்ரைனில் சுமி நகரில் தவிக்கும் 700 இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரம்

கிவ்:

உக்ரைன் மீதான போர் தொடங்கி இன்றுடன் 13 நாட்கள் ஆகிறது.

உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ள நிலையில் அங்குள்ள மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகிறார்கள்.

இதுவரை 17 லட்சம் பேர் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அங்கிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் மூட்டை, முடிச்சுகளுடன் ஊரை காலி செய்துவிட்டு சென்றவண்ணம் உள்ளனர்.

இதற்கிடையே உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

ஆனால் இதுவரை எந்த சமரச முயற்சியும் வெற்றி பெறவில்லை. இதையடுத்து ரஷிய தாக்குதலில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு ஜ.நா. கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து 2 நாட்களுக்கு முன்பு ரஷியா தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும் உக்ரைனில் இருந்து மக்கள் கைக்குழந்தைகளுடன் வெளியேற முயன்றனர். ஆனால் ரஷியா போர் நிறுத்தத்தை முறையாக கடைபிடிக்கவில்லை என்று உக்ரைன் குற்றம்சாட்டியது.

போர் நிறுத்தம் என்று கூறிவிட்டு ரஷியா தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டதாகவும் கூறியது.

இதற்கிடையே பிரான்ஸ் அதிபர் இமானுவேல், ரஷிய அதிபர் புதினை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். பொதுமக்கள் பாதிக்கப்படுவதில் இருந்து வெளியேறுவதற்கான தற்காலிக போர் நிறுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இதை புதின் ஏற்றுக்கொண்டு நேற்று 4 நகரங்களில் போர் நிறுத்தத்தை அறிவித்தார். மக்கள் வெளியேறுவதற்காக 2 வழித்தடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அந்த 2 வழித்தடங்ளும் ரஷியா மற்றும் பெலாரஸ் நோக்கி செல்வதாக உக்ரைன் குற்றம் சாட்டியது.

இதனால் தற்காலிக போர் நிறுத்தத்தில் குளறுபடி ஏற்பட்டது. இந்த நிலையில் இந்தியா தலையிட்டு சுமி நகரில் சிக்கியுள்ள 700 மாணவர்களை மீட்க உதவி செய்ய வேண்டுமென்று கேட்டுள்ளது.

இதையடுத்து தற்காலிக போர் நிறுத்தம் இன்றும் (செவ்வாய்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை ஐ.நா.வுக்கான மாஸ்கோ தூதர் வெசிலி நெபன்சியா தெரிவித்துள்ளார்.

உக்ரைனின் முக்கிய நகரங்களான கீவ், செர்னிகோவ், சுமி மற்றும் மரியுபோல் நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறலாம் என்று ரஷியா இன்று மீண்டும் உறுதி செய்தது.

ரஷிய நேரப்படி இன்று காலை 10 மணி முதல் (இந்திய நேரப்படி மதியம் 12 மணி முதல்) அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக தற்காலிக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியா 2-வது நாளாக போர் நிறுத்தம் செய்திருப்பதால் சுமி நகரில் சிக்கியுள்ள 700 இந்தியர்களை மீட்க மத்திய அரசு தீவிரமாகியுள்ளது. நேற்று சுமியில் இருந்து அருகில் உள்ள ரெயில் நிலையத்துக்கு 700 இந்தியர்களையும் அழைத்து செல்ல பஸ்கள் அனுப்பப்பட்டன.

ஆனால் மாணவர்கள் உடமைகளுடன் தயாராக இருந்த நிலையில் பஸ்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்று மாணவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு தீவிரமாக பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

சுமியில் சிக்கியுள்ள 700 இந்தியர்களும் மீட்கப்பட்டு விட்டால், உக்ரைனில் இருந்து 99 சதவீதம் பேரை மீட்டுவிட்ட சாதனையை இந்தியா எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.