பனாஜி: கோவாவில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ள நிலையில் அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார்.
உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நேற்றுடன் நிறைவு பெற்றது. வரும் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த சூழலில் பல்வேறு முன்னணி ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை நேற்று மாலை வெளியிட்டன.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 202 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பெரும்பாலான ஊடகங்கள் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சிஅமைக்கும் என்று தெரிவித்துள்ளன.
சிறிய மாநிலமான கோவா சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. கோவா மாநிலத்தில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க 21 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆளும் பாஜகவும் காங்கிரஸும் சமமான இடங்களை பெறக்கூடும்.
எனினும் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்படக்கூடும் என்றுதெரிகிறது. அதேநேரம் இதர கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.
டைம்ஸ் நவ்-வீட்டோ வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக 14, காங்கிரஸ் 16, இதர கட்சிகள் 10 என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாத சூழலில் இதர கட்சிகள் ஆதரவுடன் ஆட்சியமைக்க அக்கட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் கோவாவில் தொங்கு சட்டப்பேரவையே ஏற்படும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பால் ஆட்சியமைக்கும் நடவடிக்கையை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது.
இதையடுத்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். வியாழன் அன்று தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் இந்த பயணம் முக்கியமாக கருதப்படுகிறது.
கோவாவில் ஆட்சியை தக்கவைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சாவந்த் பிரதமர் மோடியிடம் விளக்குவார் என்று தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பின்பு சாவந்த் மும்பைக்குச் செல்கிறார், அங்கு அவரும் மாநில பாஜக தலைவர் சதானந்த் எம் ஷெட் தனவாடேவும் பாஜகவின் கோவா பொறுப்பாளரான தேவேந்திர பட்னாவிஸை சந்திக்கின்றனர்.
பட்னாவிஸ் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியுடன் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது. இதுமட்டுமின்றி வெற்றிபெற வாய்ப்புள்ள சுயேட்சைகளை அணுகி வருகிறது.